ஆத்ம நிர்பர் இண்டெக்ஸ்

பாரதம் பல துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது சில துறைகளில்வெளிநாடுகளையும், வெளிநாட்டு தயாரிப்புகளையும் நம்பியில்லாமல் சொந்த தயாரிப்புகளால் உள்நாட்டுத் தேவைகளை பூர்த்திச் செய்வதுடன் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை மேலும் பல துறைகளுக்கு விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தை செயல்படுத்தி வருவதுடன் இதற்காக பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. பாரதத்தின் சுய சார்பு குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC) இணைத்து தயாரித்த அறிக்கை ஒன்றில், பாரதம் ஜவுளி, ஆடைகள், உணவுப் பொருட்கள், இரும்பு மற்றும் ஸ்டீல், போக்குவரத்து ஆகியவற்றில் ஆத்மநிர்பர் என்ற நிலையை அடைந்துள்ளது என்றும், இயந்திரங்கள், மின்னணுவியல் மற்றும் பிளாஸ்டிக் துறைகளில் தொடர்ந்து பின்தங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக பாரதத்தின் சுயசார்பு அளவீட்டை கணக்கிடும் நடவடிக்கையாக, இந்த அமைப்புகள் இணைந்து ஆத்ம நிர்பர் இண்டெக்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளன. இதில் நாட்டின் மொத்த ஏற்றுமதி இறக்குமதியின் விகிதங்களை வைத்து நாட்டின் சுயசார்பு அளவீடு கணக்கிடப்படுகிறது. அதன்படி கடந்த நிதியாண்டுக்கான ஆத்மநிர்பர் இண்டெக்ஸ் 0.69 ஆக உள்ளது. இந்தக் குறியீடு பாரதத்தை ஜவுளி, அலுமினியம், மின்னணுவியல், உணவுப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட 20 துறைகளாகப் பட்டியலிட்டு தனது ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி அளவீடுகளை வைத்துக் கணக்கிடுகிறது. இந்த 0.69 என்ற மதிப்பீடு எப்போது 1 என்ற நிலையைத் தாண்டுகிறதோ, அப்போது ஒட்டுமொத்த பாரதமும் சுயசார்பு நிலையை அடைந்ததாகப் பொருள். கடந்த நிதியாண்டில் நாட்டின் ஆத்ம நிர்பர் இண்டெக்ஸ் அளவு 0.69 குறியீட்டு மதிப்புடன் இருக்கும் நிலையில் பாரதம் 422 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி, 613 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதி பதிவு செய்துள்ளது. இந்த அளவீட்டில் இருக்கும் 20 துறைகளில் 8 துறைகளின் அளவீட்டு 1க்கு மேல் உள்ளது. மீதமுள்ள 12 துறைகள் 1க்கு கீழ் உள்ளது. இதன் மூலம் 8 துறைகளில் பாரதம் ஆத்மநிர்பர் நிலையை அடைந்துள்ளது.