மனதின் குரல் 96வது பகுதி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்றைய மனதின் குரல் 96வது பகுதியாகும். மனதின் குரலின் அடுத்த பகுதி 2023ம் ஆண்டின் முதல் பகுதியாக அமையும். கடக்கவிருக்கும் 2022ம் ஆண்டு குறித்துப் பேச உங்களில் பலர் வேண்டுகோள் விடுத்திருக்கிறீர்கள். கடந்தகாலம் பற்றிய மதிப்பீடுகளும் அலசல்களும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் தொடர்பான தயாரிப்புக்களுக்கான உத்வேகத்தை அளிக்கின்றன. 2022ம் ஆண்டில், நாட்டுமக்களின் திறமைகள், அவர்களின் ஒத்துழைப்பு, அவர்களின் மன உறுதி, அவர்களுடைய பரவலான வெற்றிகள் எந்த அளவுக்கு இருந்தன என்றால், இவற்றையெல்லாம் ஒரே மனதின் குரலில் தொகுத்தளிப்பது என்பது கடினமானதாக இருக்கும்.  2022ம் ஆண்டு உண்மையிலேயே பல காரணங்களுக்காக மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக அமைந்திருந்தது, அற்புதமானதாக இருந்தது. இந்த ஆண்டில், பாரதம் தான் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியது, அமுதகாலமும் தொடங்கியது. இந்த ஆண்டில் தான் தேசத்தில் புதுவேகம் உருவானது. நாட்டுமக்கள் அனைவரும் ஒருவரையொருவர் விஞ்சும் அளவுக்குச் செயலாற்றினார்கள். பல்வேறு வெற்றிகளும், உலகம் முழுவதிலும் பாரதத்திற்கான ஒரு சிறப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் வரிசையில் பாரதம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது. 220 கோடி தடுப்பூசிகள் என்ற வியப்பையும் மலைப்பையும் ஒருசேர ஏற்படுத்தக்கூடிய இலக்கைத் தாண்டிச் சாதனை படைத்தது பாரதம். இந்த ஆண்டில் தான் 400 பில்லியன் டாலர்கள் என்ற மாயாஜால இலக்கை பாரதம் தாண்டி ஆச்சரியமான சாதனையைப் படைத்தது. பாரதநாட்டவர் அனைவரும் தற்சார்பு பாரதம் என்ற மனவுறுதியை மேற்கொண்டார்கள், வாழ்ந்தும் காட்டி வருகிறார்கள். இந்த ஆண்டில் தான் பாரதத்தின் முதல் சுதேசி விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் படையில் இணைக்கப்பட்டது. விண்வெளித்துறை, ஆளில்லா வானூர்தி எனும் டுரோன்கள் பாதுகாப்புத் துறையில் பாரதம் தனது முத்திரையைப் பதித்தது. அனைத்துத் துறைகளிலும் பாரதம் தனது தாங்கும் உறுதியை வெளிப்படுத்தியது. விளையாட்டு மைதானத்திலும் கூட, அது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகட்டும், அல்லது நமது பெண்கள் ஹாக்கி அணியின் வெற்றியாகட்டும், நமது இளைஞர்கள் சிறப்பாக ஆடித் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

2022ம் ஆண்டு, மேலும் ஒரு காரணத்திற்காக நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வின் விரிவாக்கம் தான் அது.  நாட்டுமக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் விதமாக காசி தமிழ் சங்கமம் போன்ற அற்புதமான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஒற்றுமையின் பல வண்ணங்கள் தென்பட்டன. 2022ல் நாட்டுமக்கள் மேலும் ஒரு அமர இதிஹாசத்தை எழுதினார்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்தை யாரால் மறந்து விட முடியும்? இந்த இயக்கம் நாடு முழுவதையும் மூவர்ணத்தால் நிரப்பியது.  6 கோடிக்கும் அதிகமானோர் மூவர்ணக் கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். சுதந்திரத்தின் இந்த அமுதப் பெருவிழாவிலே அடுத்த ஆண்டும் இதே போலவே நடக்கும். அமுதகாலத்தின் அடித்தளத்தை இது மேலும் பலமுடையதாக ஆக்கும். இந்த ஆண்டு பாரதம், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறது.  2023ம் ஆண்டில் நாம் ஜி20 அளிக்கும் உற்சாகத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்வோம், இந்த நிகழ்ச்சியை அனைவரையும் பங்கெடுக்கும் இயக்கமாக மாற்றுவோம்.

உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை, அவரது கற்பித்தல்கள் ஆகியவற்றை நினைவில் கொள்ள வேண்டிய தினமாகும் இது. இன்று, நம் அனைவரின் மதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் பிறந்த தினமும் ஆகும்.  அவர் ஒரு மாபெரும் அரசியல் தலைவர், தேசத்திற்கு அசாதாரணமானதொரு தலைமையை அளித்தார். நாட்டுமக்கள் அனைவரின் இதயங்களிலும் அவருக்கென ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. நாளை டிசம்பர் 26ம் தேதியானது வீர பால தினம் ஆகும். இந்த வேளையில் டெல்லி மாநகரிலே, இளவரசர் ஜோராவர் சிங்ஜி, இளவரசர் ஃபதேஹ் சிங்ஜி ஆகியோரின் உயிர்த்தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரும்பேறு எனக்குக் கிடைக்கவிருக்கிறது. இளவரசர்கள், தாய் குஜ்ரீ ஆகியோரின் பிராணத்தியாகத்தை தேசம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.

நமது நாட்டிலே ஒரு வழக்குண்டு. “சத்யம் கிம பிரமாணம், பிரத்யக்ஷம் கிம பிரமாணம்” அதாவது சத்தியத்திற்கு எந்தச் சான்றும் தேவையிருப்பதில்லை, முதல் தோற்றத்திலேயே எது தெளிவாகத் தெரிகிறதோ, அதற்கும் எந்தச் சான்றும் தேவையிருப்பதில்லை. ஆனால் நவீன மருத்துவ அறிவியல் எனும்போது, அதில் மிகவும் முக்கியமானது சான்று. பல நூற்றாண்டுகளாக பாரத நாட்டவர்களின் வாழ்க்கையின் அங்கமாகத் திகழும் யோகக்கலை, ஆயுர்வேதம் போன்ற நமது சாத்திரங்களின் முன்பாக சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வின் குறைபாடு எப்போதுமே ஒரு சவாலாக விளங்கி வந்திருக்கிறது. பலன்கள் காணக் கிடைக்கின்றன என்றாலும், சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால் சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட மருத்துவ யுகத்தில், இப்போது யோகமும் ஆயுர்வேதமும், நவீன யுகத்தின் ஆய்வு மற்றும் அளவுகோல்கள் தொடர்பாகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  ஆய்வு, கண்டுபிடிப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றில் பெயர் பெற்ற மும்பை டாடா மெமோரியல் சென்டர் வாயிலாகப் செய்யப்பட்ட ஒரு தீவிர ஆய்வின் முடிவுகள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகக்கலை மிகவும் பயனளிப்பதாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள், உலகின் பெரியபெரிய வல்லுநர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தது. இந்த மையத்தின் ஆய்வுகளின்படி, யோகக்கலையின் இடைவிடாத பயிற்சியால், மார்ப்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் நோய், மீண்டும் வளர்வதிலோ, மரண அபாயத்திலோ 15 சதவீதம் குறைவு ஏற்படுவதாகக் கண்டுபிடித்தது. பாரதநாட்டுப் பாரம்பரிய சிகிச்சையின் முதல் எடுத்துக்காட்டு இது.

இன்றைய யுகத்தில், பாரதநாட்டு சிகிச்சை முறைகள் எத்தனை அதிகமாக சான்றுகளை ஆதாரமாகக் கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு உலகிலே இதன் ஏற்புத்தன்மையும் அதிகரிக்கும். இந்த எண்ணத்தோடு, டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையும் கூட ஒரு முயல்வினை மேற்கொண்டு வருகிறது. இங்கே, நமது பாரம்பரிய சிகிச்சை முறைகளைச் சரிபார்க்க என்றே ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆய்வு மையம் நிறுவப்பட்டது. இதில் நவீன, புதுமையான உத்திகள் மற்றும் ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் ஆய்வறிக்கைகளில் syncope என்ற உணர்விழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யோகக்கலையால் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. நரம்பியல் சஞ்சிகையின் ஒரு ஆய்வறிக்கையில், ஒற்றைத் தலைவலிக்கு யோகக்கலையால் கிடைக்கக்கூடிய நிவாரணம் குறித்தும் பதிவிடப்பட்டிருக்கிறது. இருதய நோய், மன அழுத்தம், உறக்கமின்மை, மகப்பேறுக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என மேலும் பல நோய்கள் தொடர்பாகவும் யோகக்கலை அளிக்கவல்ல ஆதாயங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில நாட்கள் முன்பாக, உலக ஆயுர்வேத மாநாட்டிற்காக நான் கோவா சென்றிருந்தேன். இதில் 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கெடுத்தார்கள், 550க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பாரதம் உட்பட, உலகெங்கிலுமிருந்து சுமார் 215 நிறுவனங்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அங்கு, ஆயுர்வேத வல்லுநர்கள் முன்பாக, சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு தொடர்பான என்னுடைய வேண்டுகோளை நான் முன்வைத்தேன். இத்தகைய முயற்சிகள் பற்றி உங்களிடம் தகவல்கள் இருந்தால், அவற்றை கண்டிப்பாகப் பகிருங்கள். கடந்த சில ஆண்டுகளில் நாம் உடல்நலத் துறையுடன் தொடர்புடைய பல பெரிய சவால்களில் வெற்றிகளை அடைந்திருக்கிறோம். நமது மருத்துவ வல்லுநர்கள், அறிவியலார்கள், நாட்டுமக்களின் பேரார்வம் ஆகியவற்றுக்கே இதற்கான முழுப்பாராட்டும் சேரும்.

நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அன்னை கங்கையோடு இணைபிரியா பந்தம் இருக்கிறது. கங்கை ஜலம் என்பது நமது வாழ்க்கையோட்டத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்து வந்திருக்கிறது. , நமது சாஸ்திரங்களில், ‘ஹே அன்னை கங்கையே!!  நீங்கள், உங்களுடைய பக்தர்களுக்கு, அவர்களுடைய உணர்வினுக்கு ஏற்ப இகலோக சுகங்கள், ஆனந்தம் மற்றும் வீடுபேற்றினை அளிக்கிறீர்கள். அனைவரும் உங்களுடைய பவித்திரமான திருவடிகளில் வணங்குகிறார்கள். நானும் உங்களின் புனிதமான திருவடிகளில் என்னுடைய வணக்கங்களை அர்ப்பணம் செய்கிறேன்”.  இவ்வாறாக, பல நூற்றாண்டுகளாகக் கலகலவெனப் பெருகியோடும் கங்கை அன்னையைத் தூய்மையாக வைத்திருப்பது என்பது நம்மனைவரின் மிகப்பெரிய பொறுப்பாகும். இந்த நோக்கத்தோடு தான், எட்டாண்டுகள் முன்பாக நாம், நமாமி கங்கே இயக்கத்தைத் தொடங்கினோம். பாரதத்தின் இந்த முன்னெடுப்பு இன்று உலகெங்கும் போற்றப்படுகிறது என்பது நம்மனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம்.  ஐ.நா அமைப்பு நமாமி கங்கே இயக்கத்தை, சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் உலகின் தலைசிறந்த பத்து முன்னெடுப்புக்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது.

நமாமி கங்கே இயக்கத்திற்கான மிகப்பெரிய ஆற்றல், மக்களின் இடைவிடாத பங்கெடுப்பு மட்டுமே. நமாமி கங்கே இயக்கத்தில், கங்கைக் காவலாளிகள், கங்கைத் தூதர்கள் ஆகியோருக்கும் பெரிய பங்கு உண்டு.  இவர்கள் மரம் நடுதல், ஆற்றுத் துறைகளைத் தூய்மைப்படுத்தல், கங்கை ஆரத்தி, தெருமுனை நாடகங்கள், ஓவியங்கள் மற்றும் கவிதைகள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த இயக்கத்தில் உயிரி பன்முகத்தன்மையிலும் கூட பெருமளவு மேம்பாடு காணப்பட்டு வருகிறது. கங்கையின் சூழலமைப்பு சுத்தமாவதால், வாழ்வாதாரத்திற்கான வேறுபல வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. சுற்றுலாவை ஆதாரமாகக் கொண்ட படகுப் பயணங்கள் 26 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. நமாமி கங்கே இயக்கத்தின் விரிவாக்கம், அதன் வீச்சு, நதியின் தூய்மைப்படுத்தலைத் தாண்டியும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது.

தூய்மை பாரதம் இயக்கம் என்பது இன்று அனைத்து பாரத மக்களின் மனங்களிலும் கலந்து விட்ட ஒன்றாகி இருக்கிறது. 2014ம் ஆண்டிலே இந்த மக்கள் இயக்கத்தினைத் தொடங்கிய வேளையில், இதைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல, பல அருமையான முயற்சிகளை மக்கள் மேற்கொண்டார்கள், இந்த முயற்சிகள், சமூகத்தின் உள்ளே மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு உள்ளேயும் அரங்கேறி வருகின்றது.

நமது நாட்டில், நமது கலை கலச்சாரம் தொடர்பான ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, ஒரு புதிய விழிப்பு பிறப்பெடுக்கிறது. மனதின் குரலில், நானும், நீங்களும், பல முறை இப்படிப்பட்ட உதாரணங்கள் பற்றி விவாதித்திருக்கிறோம். எப்படி கலை, இலக்கியம், கலாச்சாரம் ஆகியன சமூகத்தின் பொதுவான முதலீடுகளாக இருக்கின்றனவோ, அதே போல இவற்றை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இருக்கிறது. நண்பர்களே, தங்களுடைய கலை கலாச்சாரம் தொடர்பாக நாட்டுமக்களின் உற்சாகம், தங்களுடைய மரபின் மீதான பெருமித உணர்வின் வெளிப்பாடு தான். நமது தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் இப்படி எத்தனையோ வண்ணங்கள் நிரம்ப இருக்கின்றன. நாமும் அவற்றை அழகுபடுத்தி, மெருகேற்றிப் பாதுகாக்கும் பணிகளில் இடைவிடாது நாம் பணியாற்ற வேண்டும்

இப்போது நாம் மனதின் குரலின் 100வது பகுதியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். மக்களின் பல கடிதங்கள் எனக்குக் கிடைக்கின்றன. இவற்றில் அவர்கள் 100வது பகுதியைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 100வது பகுதியில் நாம் என்ன பேசலாம், அதை எப்படி சிறப்பானதாக ஆக்கலாம் என்பது தொடர்பாக உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பினால் நன்றாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் 2023ம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டும், தேசத்தின் பொருட்டு சிறப்பாக அமைய வேண்டும், தேசம் புதிய சிகரங்களைத் தொடர்ந்து தொட்டு வர வேண்டும், நாமனைவரும் இணைந்து உறுதிப்பாடு மேற்கொள்வோம், சாதித்தும் காட்டுவோம். இந்த சமயம், பலரும் விடுமுறை மனோநிலையில் இருப்பார்கள். நீங்கள் இந்தச் சந்தர்ப்பங்களை ஆனந்தமாக செலவிடுங்கள், ஆனால் சற்று எச்சரிக்கையோடும் இருங்கள். உலகின் பல நாடுகளில் கொரோனா பெருகி வருவதால் நாம் முககவசம் அணிதல், கைகளைக் கழுவி வருதல் போன்ற முன்னெச்சரிக்கைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால், பாதுகாப்பாக இருந்தால், நமது கொண்டாட்டத்தில் எந்தத் தடையும் ஏற்படாது. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள், நன்றிகள், வணக்கம்.