வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலையை ஐந்து ரூபாயும் டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்போம் என்றனர். ஆனால், சொன்னதை அவர்கள் செய்யவில்லை. தி.மு.கவிலும் பொருளாதார நிபுணர்கள் உள்ளனர். முழுவதுமாக பொருளாதார நிலை அறிந்த பிறகே ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் பா.ஜ.க மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சொல்லாமலேயே விலை குறைப்பு செய்துள்ளார்கள். தி.மு.க ஏன் செய்யவில்லை என மக்கள் கேட்கிறார்கள். சொன்னதை செய்யுங்கள் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். பொய் சொல்வதில் போட்டி வைத்தால் தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் முதலிடம் பிடிப்பார்கள். மத்திய அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தச் சொல்லவில்லை. காற்றாலை, சூரிய மின்சக்தியில் பாரதத்தில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால், நிலக்கரியை இறக்குமதி செய்யும்போது கமிஷன் பெறுவதற்கும், தனியார் நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் தான் இந்த மின்கட்டண உயர்வு பயன்படுகிறது.

சாமானிய மக்களுக்கு மின்கட்டண உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் காற்றாலைக்கு ஒரு மெகாவாட்டுக்கு ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்கின்றனர். பெயர் மாற்றம் செய்ய ரூ. 10 லட்சம் லஞ்சமாக கேட்கின்றனர். இப்படி இருந்தால் எந்த தொழிலதிபர் காற்றாலையை நிறுவுவார்? ரூப் டாப் சோலார் மின்சாரம் ஒரு கிலோ வாட்க்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். தமிழக அரசு 3,500 மெகாவாட் ரூப் டாப் சோலார் மின்சாரம் போடுவோம் என எழுத்துபூர்வமாக சொல்லியுள்ளனர். ஆனால் 300 மெகாவாட் கூட தமிழகத்தில் இல்லை. மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், ஏற்றுமதி மதிப்பு என்ன, மின்வாரியம் எவ்வளவு நஷ்டத்தில் உள்ளது, எவ்வளவு வட்டி கட்டுகிறார்கள், நஷ்டத்துக்கு காரணம் என்ன? என்பதை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வரும் போது 67 சதவீத மக்களிடம் மட்டுமே எரிவாயு இணைப்பு இருந்தது. தற்போது 97.3 சதவீத மக்களிடம் எரிவாயு இணைப்பு உள்ளது. பாரதத்தில் போதுமான எரிவாயு உற்பத்தி இல்லை  என்பதால் நாம் இறக்குமதி செய்கிறோம். இரண்டு மடங்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலை உள்ள இடத்தில் இருந்து வாங்கி மக்களுக்கு கொடுத்து, மத்திய அரசு மக்களுக்கு பாதுகாவலான உள்ளது. உலகம் முழுவதும் பிரச்சனை உள்ளது. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என ஐ.நா.விடம் பாரதம் சொல்லியுள்ளது. குண்டு சட்டிக்குள் தி.மு.க அரசியல் செய்கிறது. இதில் புதிதாக வம்புக்கு இழுக்கும் வகையில் பா.ஜ.க பேசவில்லை. இதை அமைச்சர்கள் உணர்ந்து கொள்ளாத வரை தமிழக அரசியலில் கஷ்டம் தான்.

மத்திய அரசு உணவு திட்டத்தை 2023 டிசம்பர் வரை நீட்டித்துள்ளது. 2 லட்சம் கோடி செலவில் 83 கோடி மக்கள் பயன்பட உள்ளார்கள். இதையாவது தமிழக அரசு மக்களுக்கு உருப்படியாக கொடுக்க வேண்டும். பனைவெல்லத்தை பொங்கல் பரிசுத் தொகுப்போடு அளிப்பதாக தெரிவிக்கவில்லை. கரும்பும் அளிக்கவில்லை. அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது 5 ஆயிரம் கொடுக்க சொன்னார்கள். இது பொங்கல் தொகுப்பு இல்லை. பொய் தொகுப்பு. சர்க்கரை கொடுத்தால் மக்கள் சக்கரை பொங்கல் செய்வார்கள் என அமைச்சர் எ.வ.வேலு சொல்லியிருப்பது அபத்தமான கருத்து. மக்களது கோபத்திற்கு மேலும் மேலும் அவர்கள் ஆளாகி கொள்கிறார்கள். பொய்களை மட்டும் சொல்லி கொண்டிருக்கும் தி.மு.கவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் முடிவுரை எழுதுவார்கள். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிவிட்டார் பார்ப்போம். உத்தவ் தாக்கரே அமைச்சராகியது என்ன ஆனது என்று பாருங்கள்” என தெரிவித்தார்.