1991ல் நரசிம்மராவ் பிரதமரானபோது, அவருக்கு வயது 70. தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியிலிருந்து அவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்திருந்தார்கள். டெல்லி வீட்டை காலி செய்துவிட்டு, பம்பாயில் ஒரு சின்ன பிளாட்டில் குடியேறியிருந்தார். ஆந்திராவுக்கு திரும்பச் செல்வதற்கு மனமில்லை. ராஜீவ் காந்தி படுகொலை, நரசிம்மராவின் அரசியல் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்தது.
நரசிம்மராவ் வந்த நேரம், சரியான நேரமில்லை. தாராளமயமாக்கலை அமல்படுத்துவதற்கு சர்வ நிச்சயமாக சரியான நேரமல்ல. ராஜீவ் காந்தி இருந்ததிருந்தால் அதை நிச்சயம் செய்திருக்க மாட்டார். ஆனால், கடன்கார அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்த நரசிம்மராவுக்கு வேறு வழி தெரியவில்லை. நிதி ஆதாரங்கள் குறைந்துகொண்டே வந்தன. அந்நிய செலாவணி கையிருப்பு மிகமோசமான நிலையில் இருந்து. பணவீக்க விகிதம் 16.7 சதவீதத்திற்கு போய் அங்கேயே சம்மணமிட்டு உட்கார்ந்துவிட்டது.
உலக அரசியல் சூழலும் மாறிப்போயிருந்தது. பனிப்போர் காலம் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியாவின் நீண்ட நாளைய நண்பரான சோவியத் ரஷ்யா, சுக்குநூறாக உடைந்து கிடந்தது. ஒரு காலத்தில் பொருளாதார உதவி மட்டுமல்ல தார்மீக உதவியெல்லாம் செய்து தன்னம்பிக்கை ஊட்டிய நாடு. ஆனால், ஆறே மாதத்தில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விட்டது. இன்னொரு பக்கம் வளைகுடாப்போர். இந்நிலையில்தான் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.
எங்கேயோ இருந்த மன்மோகன் சிங்கை தேடிப்பிடித்து நரசிம்மராவ் நிதியமைச்சராக்கினார். ஒருவருக்கு நல்ல நேரம் வந்துவிட்டால் உலகத்தில் யாரும் அவரை தடுக்க முடியாது என்கிற பொன்மொழியோடு தன்னுடைய பட்ஜெட் அறிக்கையை ஆரம்பித்த மன்மோகன் சிங், தடாலடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
காங்கிரஸ் கட்சிக்காரர்களே பயந்து போனார்கள். தாராளமயமாக்கல் என்கிற வார்த்தையைக் கேட்டதும் சிவப்புக் கொடியோடு இடதுசாரிகள் களத்தில் இறங்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம், அப்படியெல்லாம் அவசரப்படாதீங்க என்று வலதுசாரிகளும் அரசை எதிர்த்து விமர்சனம் செய்தார்கள். யாருக்கும் நம்பிக்கையில்லை. அடுத்து வந்த மூன்று ஆண்டுகளும் தாராளமயமாக்கலை எதிர்த்து ஏராளமான போராட்டங்கள் நடந்தன. அந்நிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வரவே கூடாது என்று கோஷமிட்டார்கள்.
தாராளமயமாக்கலை எதிர்த்து இடதுசாரிகள் நடத்திய போராட்டம் பற்றிய செய்திகளை இணையத்தில் இன்றும் படிக்கலாம். ஆனால், கூகிள் கணக்கு வேண்டும். நல்லதொரு இணைய இணைப்பு வேண்டும். லேப்டாப், மொபைல் வேண்டும். இவையெல்லாமே தாரளமயமாக்கல் நமக்கு தந்த விஷயங்கள்தான்.
மாற்றங்கள் மெல்ல தெரிய ஆரம்பித்தன. ஆனால், நரசிம்மராவ் ஆட்சியில் இருந்தவரை யாருக்கும் நம்பிக்கை இல்லை. எழுபதுகளில் 4.4 சதவீத வளர்ச்சி பெற்ற இந்தியாவால் எண்பதுகளின் இறுதிவரை 5 சதவீதத்தைக் கூட தொட முடியவில்லை. ஆனால், 90களில் ஆரம்பித்த ஓட்டம் இன்றுவரை நிற்கவில்லை. இன்று 3 டிரில்லியன் டாலர் என்னும் மைல் கல்லை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டிருந்த நரசிம்மராவ், அரசியல் ரீதியாகவும் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நேரு குடும்பத்தின் தலையீடும் இருந்தது. மாநில அளவில் நடந்த காங்கிரஸ் கோஷ்டி பூசலையும் அடக்க வேண்டியிருந்தது. ஒரு பக்கம் இடதுசாரிகளின் எதிர்ப்பு, இன்னொரு பக்கம் வலதுசாரிகளின் எதிர்ப்பு. இருதரப்பிலும் நரசிம்மராவுக்கு நண்பர்கள் அதிகம். இறுதிவரை இரு தரப்பையும் வெற்றிகரமாக சமாளித்தார்.
இடதுசாரிகளிடம் பொருளாதாரக் கொள்கை பற்றி பேசாமல், அயோத்தி பிரச்னையைப் பற்றி பேசினார். வலதுசாரிகளிடம் அயோத்தி பிரச்னையைப் பற்றி பேசுவதை தர்த்துவிடடு, தாராளமயமக்கலால் வந்த நன்மைகள் பற்றி பேசினார். யாரிடம் எதைப் பற்றி பேசவேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர், இந்தியாவின் பிரதமராக ஐந்தாண்டுகள் நிறைவு செய்தது அதுதான் முதல் முறை. லால் பகதூர் சாஸ்திரி முதல் சந்திரசேகர் வரை எத்தனையோர் பேர் வந்தார்கள். யாராலும் நிலைகொள்ள முடியவில்லை. நரசிம்மராவால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு திறமையாக விளையாடவும் முடிந்தது.
ஐந்தாண்டின் முடிவில் அரசியல் ரீதியாக நரசிம்மராவ் வலுவாகிவிட்டார். அடுத்து நம்முடைய ஆட்சிதான் என்று அதீத நம்பிக்கையோடு இருந்த பா.ஜ.கவே திணறிவிட்டது. வட இந்திய இந்துக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய அத்வானி, அடுத்த பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.
குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றிருந்தாலும் அத்வானிக்கு நம்பிக்கை வரவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் பெரும்பான்மை இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தெரிந்தது. சிவசேனா தவிர வேறெந்த மாநில கட்சிகளும் பாஜகவோடு நெருங்கி வருவதற்கு தயங்கி நின்றன. காங்கிரஸ் தோற்றுப்போனாலும், தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி சேர்ந்து எப்படியும் நரசிம்மராவ் பிரதமராகிவிடுவார் என்று அத்வானி உறுதியாக நம்பினார்.
அனைத்து கட்சிகளையும் அரவணைக்கும் ஒரு முகம் வேண்டும். தன்னால் அதை செய்ய முடியாது என்கிற உண்மையை அத்வானி உணர்ந்து கொண்டார். நரசிம்மராவை சமாளிக்க வேறு யாரையாவது முன்னிறுத்தவேண்டும். 70 வயது நரசிம்மராவை சமாளிக்கத்தான் 70 வயது வாஜ்பாய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். நரசிம்மராவ் நேரடியாக சாதித்த விஷயங்கள் நிறைய. கொண்டு வந்த மாற்றங்களும் அதிகம். அதே போல் மாற்றான் தோட்டத்தில் நடந்த மாற்றங்களுக்கும் காரணமாக இருந்தார் என்பதையும் மறுக்க முடியாது.
– ஜெ. ராம்கி