ஆளும் கட்சிக்கு தொடர்பு

பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலர் பலியானார்கள்.இந்த பலி எண்ணிக்கை 82 என கூறப்பட்டது.எனினும், 200 பேர் வரை உயிரிழந்து இருக்க கூடும், இதனை பீகார் அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.விஷ சாராய விவகரத்தில் அரசு தரப்பு விவரங்கள் அடிப்படையில், சரண் மாவட்டத்தில் அதிக அளவாக 74 பேர் உயிரிழந்து உள்ளனர்.சிவான் மாவட்டத்தில் 5 பேரும், பெகுசராய் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.25 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது.30 பேர் வரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை பற்றி விசாரணை மேற்கொள்ளவும் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபான தயாரிப்புகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசு உத்தரவிட்டது. இதனிடியே, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த  விரிவான அறிக்கையை அளிக்கும்படி மாநில அரசையும் கேட்டுள்ளது. மேலும் ஆணையத்தின் 9 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளது.இந்த சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பீகாரை சேர்ந்த பா.ஜ.க. சேர்ந்த எம்.பி. சுஷில் மோடி , “பீகாரில் ஆளும் கூட்டணி கட்சிகளான ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு மதுபான தொழிலில் கூட்டு உள்ளது. ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.சி.யான ராம்பால் சிங் சந்திரவன்ஷி நடத்திய அதிரடி ஸ்டிங் ஆபரேசனில் அவர்களது கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மதுபானம் குடிப்பவர் என தெரிய வந்துள்ளது. பீகாரில் மதுபானத்திற்கு தடை என்ற ஆளும் கட்சியின் திட்டம் தோல்வி அடைந்து உள்ளது” என கூறியுள்ளார்.