உத்தரப் பிரதேசம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபாஸ்பூர் கிராமத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு மக்களை நம்பவைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் சட்ட விரோத மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் உள்ளூர் பாதிரி டேவிட் அஸ்தானாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக டேவிட்டின் மனைவி மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு பிரேசில் பிரஜைகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பாதிரி டேவிட் அஸ்தானா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கி பெரிய மண்டபம் ஒன்றை கட்டினார்.டேவிட் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மதமாற்றக் கூட்டங்களை நடத்துவார்.அங்கு அவர் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை விநியோகிப்பதாக கிராமவாசிகள் குற்றம் சாட்டினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், டேவிட் அந்த மண்டபத்திற்குள் ஒரு குழுவினருடன் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவர் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டினர்.தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள், நான்கு பிரேசில் பிரஜைகள் உட்பட போதகர் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.அந்த நான்கு பிரேசில் பிரஜைகளும் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் பாரதம் வந்துள்ளனர்.விசா விதிமுறைகளை மீறி சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்தது. அவர்கள் லக்னோவில் உள்ள அவர்களது ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் காவல்துறை பாதுகாப்பில் வைத்து விசாரிக்கப்படுவார்கள் என்று டெல்லியில் உள்ள பிரேசில் தூதரகத்திற்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர். விசாரணைக்குப் பிறகு அடுத்து அவர்களை மீண்டும் அவர்களது நாட்டுக்கே நாடு கடத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.