காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜூடோ’ என்ற நடைபயணத்தின் 100வது நாளை முன்னிட்டு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாரதத்துக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், இதனை நமது மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை மறைத்து வருகிறது” என்று கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “ஏற்கனவே ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து காங்கிரஸ் நிதி பெற்றுள்ளது. ராகுல் காந்தி பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாக கருதத் தேவையில்லை. நேருவின் காலத்தில் நம் நிலம் சீனாவின் கைவசம் சென்றதை மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்” என்றார். இதனை கண்டித்துள்ள பா.ஜ.க எம்.பி. ராஜ்யவர்த்தன் ரத்தோர் கூறுகையில், “பாரதத்தின் 37 ஆயிரம் சதுர கி.மீ நிலம் சீனாவின் வசம் சென்றபோது ராகுல் காந்தியின் தாத்தா உறங்கிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.135 கோடி நிதியை சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பெற்றுள்ளது. ராகுல் காந்தி சீனாவுக்கு மிகவும் நெருக்கமாகியுள்ளார்.. அதனால் தானோ என்னவோ அவருக்கு அடுத்தடுத்து என்ன நடக்கலாம் என்பது கூட தெரிகிறது” என்று கிண்டல் செய்துள்ளார். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், “ராகுல்காந்தி, இந்திய ராணுவத்தை அவமதித்தது மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கிறார். ராகுல்காந்தி காங்கிரசுக்கு மட்டும் பிரச்சினை அல்ல. அவர் நாட்டிற்கும் மிகப்பெரிய அவமானம். இந்திய ராணுவத்தை நினைத்து மக்கள் பெருமைபடுகின்றனர்’ என்றார்.