வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலையான பிறகு சிறிது காலம் சென்னையில் தங்கியிருந்தார். ஒருநாள் மாலை வேளையில் மெரினா கடற்கரைக்கு வந்தார். அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருடைய நண்பர்கள் மாணிக்கம் பிள்ளையும் மணி ஐயரும் அவரை வரவேற்றனர். மணி ஐயர் வ.உ.சியின் வரலாற்றை ஒரு சிறு புத்தகமாக எழுதியிருந்தார். அதை வ.உ.சியிடம் படித்துக் காட்ட விரும்பி, படித்துக் காட்டினார். அதில் கடைசி அத்தியாயத்தில் சென்னையில் வ.உ.சி. அனுபவித்த கஷ்டங்களை எழுதியிருந்தார்.
‘தமிழா! கப்பலோட்டி ஆங்கிலேயரின் அடிவயிற்றைக் கலக்கியவரின் அருமையை நீ அறிவாயா? மண்ணை மீட்டெடுக்கப் போராடியவரை இன்று மண்ணெண்ணெய் விற்க வைத்து விட்டாயே!
‘சே, தமிழனே! வெள்ளைக்காரனாவது வ.உ.சியை செக்கிழுக்க வைத்து, எண்ணெய் எடுக்க வைத்தான். ஆனால், நன்றியில்லாத நீயோ, இன்று அவரைக் கடை வைத்து எண்ணெய் அல்லவா விற்க வைத்து விட்டாய்!
‘வெள்ளையனை எதிர்த்து 6 ஆண்டு காலம் சிறை சென்று வந்தவரை வரவேற்கச் சென்றவர்கள் மூன்றே பேர்’ என்று கேட்கிறபோது, ‘போடா…. தமிழா…, நீ ஒரு தியாகியை மதிக்கத் தெரியாதவன்’ என்றெல்லாம் தனது வருத்தத்தைக் கொட்டி எழுதியிருந்தார்.
இதைப் பொறுமையாகத் கேட்ட வ.உ.சி., தம்பி, நம் மக்களை நாமே தூற்றக் கூடாது. அது, நம் சுதேசிக் கப்பலை நாமே விற்ற அதே தவறுக்கு ஒப்பானது. சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதி செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்துவிடு என்பதுதானே கீதையின் சாரம்சம்?” என்றார்.
உடல்நலக் குறைவால் களைத்துப் போயிருந்த வ.உ.சி. மெல்ல எழுந்து கம்பீரமாக என் பாரதம் விரைவில் விடுதலை பெறும்; இறைவா! என் பாரதத்தை உயர்த்து” என்று சொல்லி, விடை பெற்றுக் கொண்டார்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்