பலன் தராத இல்லம் தேடி கல்வித் திட்டம்

நாடு முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் 86 ஆயிரம் பேரிடம் அவர்களின் அடிப்படை கற்றல் திறன் தொடர்பாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி கடந்த செப்டம்பரில் ஓர் ஆய்வை நடத்தியது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் 3ம் வகுப்பு பயிலும் 2,937 மாணவர்களிடம் தமிழ், கணிதப் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டன.இதில், தமிழக மாணவர்களின் கற்றலில் பின்தங்கி இருப்பது தெரியவந்தது.மேலும், தமிழகத்தில் வெறும் 20 சதவீதம் மாணவர்களால் மட்டுமே தமிழ் சொற்களை புரிந்துகொள்ள முடிகிறது. 23 சதவீதம் பேர்களால்தான்  அடிப்படை கணக்குகளை போட முடிகிறது. 52 சதவீத மாணவர்களால் நாள்காட்டியில் உள்ள தேதி, மாதங்களைகூட சரியாக சொல்ல முடியவில்லை.அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் மிகவும் பின்தங்கியுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் மற்ற தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்றவற்றில் சுமார் 45 சதவீத மாணவர்களால் தாய்மொழியை நன்றாக படிக்கவும், அடிப்படை கணக்குகளுக்கு பதில் அளிக்கவும் முடிகிறது என்று தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று பரவலால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்ய தமிழக அரசு,  பெயருக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டு ரூ. 500 கோடியில் ஏனோதானோவென்று செயல்படுத்திய பிரிட்ஜ் கோர்ஸ், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் எந்த பலனையும் தரவில்லை என்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இதில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு காலம் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல தி.மு.க அரசின் இல்லம் தேடி மருத்துவம், கோயில் நிலங்கள் மீட்பு, விவசாய பொருட்களை பாதுகாக்க தார்பாய் வழங்கும் திட்டம், பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாலம் உள்ளிட்ட பல தோல்வித் திட்டங்கள் வரிசையில் இல்லம் தேடி கல்வித் திட்டமும் ஒன்று என்பது நிரூபணமாகியுள்ளது, இது எதிர்பார்த்த ஒன்றுதான், இதற்காகவா மக்களின் வரிப்பணம் 500 கோடி செலவானது!? என சமூக ஊடகங்களில் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.