தொடரும் பணி நீக்கங்கள்

உலக பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வட்டி விகித உயர்வுகள், குறைவான வளர்ச்சி, புதிய ஒப்பந்தங்கள் இல்லாத நிலை, செலவுகள் குறைப்பு, உள்ளிட்ட பல காரணங்களால் உலகின் டெக் ஜாம்பவான்களான கூகுள், பேஸ்புக், ஆப்பிள், மைக்ரோசாப்ட், அமேசான், டுவிட்டர், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. பணி நீக்கம் மட்டுமில்லாமல் புதிய பணியமர்த்தலையும் கணிசமாக குறைத்துள்ளன. அமெரிக்கா டெக் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே பணியமர்த்தலை குறைத்துள்ளதால் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 9,000 பேராக இருந்த தேவை, அக்டோபர் மத்தியில் 4,000 ஆக சரிவடைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 80 சதவீத சரிவாகும். கடந்த காலாண்டில் இந்நிறுவனங்களின் புதிய பணியமர்த்தல் நடவடிக்கைகள் 70 சதவீத சரிவை கண்டுள்ளது. இது தற்போது 95 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கை இன்னும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி பாரத சந்தையிலும் காணப்படுகிறது. பாரதத்திலும் இந்த நிறுவனங்கள் பணி நீக்கங்கள், புதிய பணியமர்த்தல் நிறுத்தம் என பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால், பணி நீக்கத்திற்கு பிறகான புதிய பணி வாய்ப்புகள் சுமார் 95 சதவீதம் குறைந்துள்ளது என எஸ்க்பீனோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இது டெக் நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேறுவதை மேலும் அதிகரிக்கலாம் என்று இதன் இணை நிறுவனர் கமல் காரந்த் தெரிவித்துள்ளார்.