காரில் தொங்கிய சென்னை மேயர்

முதல்வர் ஸ்டாலின் புயல், மழை பாதிப்பு ஆய்வு செய்ய சென்றபோது, முதல்வர் காரில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கிய படி சென்ற காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் விமர்சித்துள்ளனர், கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது சமூக ஊடகத்தில் கருத்துத் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “சுயமரியாதை இயக்கம்.சமூக நீதி இயக்கம்.சாமானியர்களின் கட்சி.இந்தப் போலிக் கதைகள் அனைத்தும் இறந்து புதைந்து வெகுநாட்களாகிவிட்டன. இது அறிவாலயம் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டது. இந்தப் படத்தில் சென்னை மேயர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழக முதல்வர் காரில் தொங்கியபடிகாட்சியளிக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

பாரதத்தில் உள்ள மிகப் பழமையான பெருமைமிகு பதவிகளில் ஒன்று சென்னை மேயர் பதவி. 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு தொடர்ந்து வரும் இப்பதவிக்கு என சில பெருமைகள் உள்ளன. அது முதல்வர் பதவிக்கும் கூட இல்லாதது. மேயருக்கென தனிக்கொடி உண்டு. சென்னை மாநகராட்சிக்கு எனத் தனி இலச்சினை பொறித்த கொடி அது. சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள தேசிய கொடிக்கு இணையாக இந்தக் கொடியும் ஏற்றப்படும். மாலை தேசியக்கொடி இறக்கப்படும் போது இந்தக் கொடியும் இறக்கப்படும்.அதே போல பிர்த்தியேக சிவப்பு நிறத்திலான அங்கி, கருப்பு நிறத்திலான அங்கி, வெள்ளி செங்கோல் என பல பெருமைகள் கொண்டது இந்த பதவி. ஆனால், தற்போது இந்த பதவியில் தற்போது அமர்ந்திருக்கும் மேயர் பிரியா, திறப்பு விழாவில் அமைச்சருக்கு பூத்தட்டு ஏந்துவது, குடை பிடிப்பது என ஒரு சாதாரண கட்சித் தொண்டராக செயல்படுவது அவருக்கும் கட்சியினருக்கும் வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் அது, அந்த பதவிக்கு அழகல்ல. இதேபோல, மிகவும் திறமையானவர், அர்ப்பணிப்பு உணர்வுடன் சுயநலமில்லாமல் சேவையாற்றுபவர், தமிழக மக்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர், பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் என்பதால், தமிழக மக்களுக்கும் இவர் மீது தனிப்பாசம் உண்டு. இத்தகைய இருவரும் முதல்வரின் காரில் தொங்கியபடி சென்றதை தமிழக மக்கள் யாரும் துளியும் ரசிக்கவில்லை என்பதையே இந்த சமூக ஊடக விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத்துகின்றன.