கோயம்புத்தூர், திருச்சியில் கிரிஷி உதான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் உள்ள மலைப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள எளிதில் அழுகிப் போகும் விளைபொருட்களை விரைவான போக்குவரத்து மூலம் எடுத்து வர கவனம் செலுத்தும் வகையில், அக்டோபர் 27, 2021 அன்று மத்திய அரசு கிரிஷி உதான் திட்டம் 2.0 அறிவித்தது. விமானப் போக்குவரத்து மூலம் வேளாண் உற்பத்திப் பொருட்களை விரைவாக கொண்டு செல்லும் வகையில், விமானம் இறங்குவதற்கான கட்டணம், நிறுத்துவதற்கான கட்டணம் ஆகியவற்றிலிருந்து விதிவிலக்கு சலுகைகளை இந்திய விமான ஆணையம் வழங்குகிறது. இத்திட்டம் முதல் கட்டமாக வடகிழக்கு, மலை மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் கவனம் செலுத்தும் வகையில், 25 விமான நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது.மற்ற பகுதிகளுக்காக 28 விமான நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கிரிஷி உதான் 2.0 திட்டத்தின் மதிப்பீட்டிற்கு பிறகு, மேலும் 5 விமான நிலையங்கள் இதில் இணைக்கப்பட்டு மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, கேரளாவின் திருவனந்தபுரம், ஆக்ரா, கோவா, கான்பூர், இம்பால் உள்ளிட்ட இடங்களில் கிரிஷி உதான் 2.0 திட்டம் அமல்படுத்தப்படுகிறது என மக்களவையில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஓய்வுபெற்ற ஜெனரல் வி கே சிங் கூறினார்.