கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று, குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும், நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்கவும் தக்கலை காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைத்து காவடி கட்டி பவனியாக வெள்ளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு செல்வது மரபு. துணை ஆட்சியர், நீதித்துறையில் உள்ளவர்கள் காவல் நிலையத்துக்கு வந்து காவடி பவனியை கோயிலுக்கு வழியனுப்பிவைப்பார்கள்.இதில் காவல்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் கலந்துகொண்டு, விரதமிருந்து காவடி கட்டி எடுத்துச் செல்வது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கம்.குமாரசுவாமிக்கு போலீஸ் காவடியை அபிஷேகம் செய்த பிறகு வரும் வேறு காவடிகளுக்கு அபிஷேம் செய்ய மாட்டார்கள்.அதுபோல கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நடக்கும் முதல் நாள் திருவிழா கோட்டாறு காவல் நிலையத்திலிருந்து நடத்தப்படுவது வழக்கம்.அன்று தொடங்கிய இந்தப் பாரம்பரியம், சுதந்திரத்துக்குப் பிறகும், மொழிவாரியாக கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பிறகும் தொடர்ந்து நடந்துவருகிறது.கடந்த ஆண்டும் தக்கலை காவல் நிலையத்திலிருந்து காவடி கட்டி குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவ்வகையில், இந்த ஆண்டின் கார்த்திகைக் கடைசி வெள்ளியான நேற்று, தக்கலை காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திலிருந்தும், பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்தும் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவிருந்தது. அதற்காக தக்கலை காவல் நிலையத்தில் பூஜைகளுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், தக்கலை காவல் நிலையத்திலிருந்து போலீஸார் காவடி எடுத்துச் செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தார். காவல் அதிகாரிகள், “காவல் நிலையத்தில் காவடி கட்ட முடியாது.விருப்பப்படும் காவலர்கள் விடுப்பு எடுத்து தங்கள் வீடுகளிலிருந்து காவடி கட்டி கோயிலுக்குக் கொண்டு செல்லலாம்” எனத் தெரிவித்தனர். தகவலறிந்து அங்குத் திரண்ட பக்தர்களும் இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினரும் தக்கலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பாரம்பரிய காவடிக் கட்டு நிகழ்வுக்கு அனுமதி வழங்கக் கேட்டும் பாரம்பர்யத்தை மாற்றக் கூடாது என்று கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிராமங்களிலிருந்து பக்தர்கள் எடுத்துவரும் காவடிகளை தக்கலை காவல் நிலையம் முன்பு வைக்கப்போவதாகவும், காவல் நிலையத்தில் வைத்து காவடிகட்டி எடுத்துச் சென்ற பிறகுதான் அனைத்துக் காவடிகளையும் குமாரசுவாமி கோயிலுக்கு எடுத்துச்செல்வோம் எனவும் அவர்கள் அறிவித்தனர். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் வந்து அமர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் காவடி கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.இந்த விவகாரம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.