அண்மையில் நடந்துமுடிந்த குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் குஜராத்தில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டு ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் ஆதரித்துள்ளனர், வளர்ந்த பாரதத்துக்கான சாமானியனின் ஆசை எவ்வளவு வலிமை என்பதை குஜராத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன என குஜராத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நடந்துவரும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, இம்முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் உள்ள முக்கிய அம்சங்களில் சில:
தமிழர்கள் விரும்பும் பா.ஜ.க: குஜராத்தில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளுல் ஒன்று மணிநகர். இங்கு வசிக்கும் தமிழர்களின் வாக்கு எண்ணிக்கை மட்டும் தோராயமாக 23,000.இத்தொகுதி 1990 முதலே பா.ஜ.கவின் கோட்டையாக உள்ளது.பிரதமர் மோடி இத்தொகுதியில் 2002, 2007, 2012 என்று மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. அவ்வகையில், தற்போது நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மணிநகர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் கண்ட அமுல் பாய் பட், 83,520 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றார். அதேபோன்று, தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளுல் ஒன்றான அமராவாடி தொகுதியிலும் 2012 மற்றும் 2017ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மட்டுமல்ல, தற்போதைய தேர்தலிலும் பா.ஜ.கவே வெற்றி பெற்றுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹெச்.எஸ் படேல், 43,272 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவ்வகையில், குஜராத்தில் பா.ஜ.க தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், தன் பலத்தை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளது.
மக்கள் நாயகன் வெற்றி: குஜராத்தில் கடந்த மாதம் மோர்பியில் பாலம் சிதைந்து விழுந்ததில் பலர் மரணமடைந்தனர். அப்போது உடனடியாக ஆற்றில் குதித்து 60க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றியவர் காந்திலால் அம்ருதியா.இந்த விபத்தில் இவரது குடும்பத்தினர் 12 பேர் மரணமடைந்தனர்.இவர் பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்.நடந்து முடிந்த தேர்தலில் மோர்பி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட இவர், 61,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்கள் நாயகனாகியுள்ளார்.
காம்ரேடுகளின்வாக்கு சதவீதம்: இந்த தேர்தலில், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு உலக அரசியல் பேசும் நம்ம ஊரு காம்ரேடுகளின் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் தான் இது. குஜராத்தில் – சி.பி.ஐ: 0.01 சதவீதம், சி.பி.ஐ (எம்): 0.03 சதவீதம், சி.பி.ஐ (எம்.எல்): 0.01 சதவீதம். ஹிமாச்சல பிரதேசத்தில் – சி.பி.ஐ: 0.01 சதவீதம், சி.பி.ஐ (எம்): 0.66 சதவீதம், சி.பி.ஐ (எம்.எல்): போட்டியிட ஆட்களே இல்லை.
சாதனையை முறியடித்த பா.ஜ.க: கடந்த 1985ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர் மாதவ் சிங் சோலங்கி தலைமையில் அக்கட்சி 149 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுவே குஜராத் தேர்தலின் வரலாற்று சாதனையாக இருந்தது.தற்போதைய தேர்தலில் 156 தொகுதிகளைக் கைப்பற்றிய பா.ஜ.க, காங்கிரஸின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறது.
ஆம் ஆத்மியின் ஹிமாலய சாதனை: ஹிமாச்சல பிரதேச தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வாக்குகள்: 1.10 சதவீதம் மட்டுமே. போட்டியிட்ட 67 தொகுதியிலும் டெபாசிட் தொகையை இழந்தும் 24 தொகுதிகளில் நோட்டோவை விட குறைவான வாக்குகள் பெற்றும் சாதனை படைத்துள்ளது.எனினும் அக்கட்சி.குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி சுமார் 12 சதவீத வாக்குகளை பெற்று 5 தொகுதிகளை வென்றுள்ளது.125 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட இசுதன் காத்வி, கம்பளியா தொகுதியில் தோல்வியடைந்தார்.இதேபோல இக்கட்சியின் மாநிலத் தலைவர் கோபால் இட்டலியா கட்டர்கம் தொகுதியில் தோல்வியை தழுவினார்.
நூலிழையில் வெற்றி பெற்ற காங்கிரஸ்: ஹிமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.பொதுவாகவே ஹிமாச்சல பிரதேசத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது.இத்தேர்தலில், காங்கிரசுக்கு 43.9 சதவீதம் பா.ஜ.கவுக்கு 43 சதவீதம், இதர கட்சிகளுக்கு 10.4 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.சுமார் ஒரு சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் இடையிலான வாக்கு வித்தியாசம் ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது.மேலும், தேர்தல் நேரத்தில் சீட் கிடைக்காத சில பா.ஜ.கவினர் காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு தாவினர்.பா.ஜ.கவை சேர்ந்த 21 பேர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்.இதனால் வாக்குகள் பிரிந்தன. நாட்டின் முன்னேற்றத்தை பற்றி கவலைப்படாமல் மாநில அரசின் கஜானாவை காலியாக்கி பெரும் கடன் சுமையில் ஆழ்த்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்திருந்தது. அதில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ராம்பூரில் ஒரு ஹிந்து எம்.எல்.ஏ: உத்தரப் பிரதேச அரசியலில் சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான், சர்வ அதிகாரம் கொண்டவராக முலாயம் சிங் யாதவ் ஆட்சியில் கோலோச்சியவர். இவர் கண் அசைவிற்கு ஏற்ப அரசு அதிகாரிகள் நடனம் ஆடினர்.அப்போது அவரும் அவரது கட்சி மற்றும் மதத்தை சேர்ந்தவர் சிலரும் அங்கு செய்த அட்டூழியங்கள் வார்த்தையில் விவரிக்க முடியாது.ஆட்சி அதிகாரம் மாறிய பிறகு ஆசம் கானின் ஆட்டம் மெல்ல முடிவுக்கு வரத் துவங்கியது.ராம்பூர் தொகுதியில் ஆசம் கான் சுட்டிக் காட்டும் நபரே வெற்றி பெறுவர். இப்போது நடந்த இடைத்தேர்தலில் தான் முதல் தடவையாக பா.ஜ.க. வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா என்ற ஹிந்து வேட்பாளர் சுமார் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.