நாணயக் கொள்கைக் கூட்டம்

டிசம்பர் 5ம் தேதி துவங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு, உலக நடப்புகள் மற்றும் சந்தை நிலவரத்தைப் பொருத்து சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. நாணயக் கொள்கைக் கூட்டத்தின் முடிவில், சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை (குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம்) 35 அடிப்படை புள்ளிகள் (0.35 சதவீதம்) உயர்த்தி அறிவித்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.90ல் இருந்து 6.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெப்போ விகிதம் ஒரே ஆண்டில் 5வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் எஸ்.டி.எப் விகிதம் 6 சதவீதமாகவும், வங்கி விகிதமான எம்.எஸ்.எப் 6.5 சதவீதமாக உயர்த்துவதாகவும் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். 2023ம் நிதியாண்டில் பாரதத்தின் ஜி.டி.பி வளர்ச்சி 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைத்துள்ளதாக செப்டம்பர் 30ம் தேதி கூட்டத்தில் அறிவித்த சக்திகாந்த தாஸ், தற்போது பாரதத்தின் ஜி.டி.பி வளர்ச்சி 7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தவிர, ‘பணவீக்கத்தை கட்டுப்படுத்த அர்ஜூனனின் கண்களை போல் அதனை ஆர்.பி.ஐ கண்காணிக்கும். பாரத் பில் பேமெண்ட் சிஸ்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளை தீவிரமாக்கும். யூபிஐ பேமெண்ட் சேவையை அடிப்படையாக பயன்படுத்தும் இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. நாட்டின் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறை மேம்பட உள்ளது. பணவீக்கம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 6.6 சதவீதமாக இருக்கும். 2023ம் நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும். 6 பேர் அடங்கிய நாணய கொள்கை குழுவில் 5 பேர் வட்டி விகித உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். தடுமாற்றம் அதிகம் நிறைந்த வருடத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம். பெரும்பாலான உணவு மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதிகமாகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இந்த பொருளாதார மந்தநிலை காலத்தில் பாதிக்கும் என ஐ.எம்.எப் கணித்துள்ளது. ஆனால், இந்த சூழ்நிலையிலும் பாரதம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. உலகின் பிற நாடுகளை காட்டிலும் பாரதம் வளர்ச்சி பாதையில் உள்ளது. வங்கி, கார்ப்ரேட் நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியில் உள்ளன. செப்டம்பர் மாதம் அன்னிய செலாவணி 545.65 பில்லியன் டாலராக இருந்தது. நவம்பர் 25 உடன் முடிந்த வாரத்தில் பாரதத்தின் அன்னிய செலாவணி 550.14 பில்லியன் டாலராக உள்ளது. உலக வங்கி பாரதப் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது’ என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.