கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த மாதம் 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஷாரிக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் அவர் தொடர்பில் இருந்தது, பயங்கரவாத அமைப்பு ஒன்றை நிறுவ முயன்றது, அதற்கு அப்பாவி முஸ்ளிம் இளைஞர்களை மூலைசலவை செய்து ஆட்சேர்ப்பு பணியை செய்துவந்தது, இதற்காக தமிழகதின் கோவை, நாகர்கோவில், கேரளாவின் கொச்சி போன்ற பகுதிகளுக்கு பயணித்து அங்குள்ள பல மர்ம நபர்களை தொடர்பு கொண்டது போன்ற பல விவரங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது ஷாரிக், டார்க்நெட் என்ற இணையதளம் மூலம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததும், அவருக்கு வெளிநாடுகளில் இருந்து டாலர்களில் நிதியுதவி வந்ததும் தெரியவந்துள்ளது. மைசூருவில் தங்கியிருந்த ஷாரிக், தனது முஸ்லிம் மத அடையாளத்தை ஹிந்துவாக நடித்து பலருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார். அவ்வாறு தனது நட்பில் சிக்கியவர்களிடம் டாலர்களை கொடுத்து அதை ரூபாயாக மாற்றி மீண்டும் தனது வங்கி கணக்கிற்கு மாற்றி வந்துள்ளார். மைசூருவில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் மூலம் டாலர்களை ரூபாயாக மாற்றியுள்ளார். மேலும், மைசூரு மட்டுமில்லாமல், தமிழகம் கேரளாவை சேர்ந்தவர்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து மைசூருவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் 2 இளம்பெண்களுடன் தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், மங்களூரு காவல்துறையினர் இணைந்து குடகில் உள்ள அந்த ரெசார்ட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். ரெசார்ட் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், ஷாரிக், 2 பெண்களுடன் அங்கு வந்து தங்கியதை அவர் தெரிவித்தார். இதனிடையே, அந்த ரெசார்ட் கடந்த 6 மாதங்களாக உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவதும், ரெசார்ட்டுக்கு யார், வந்து செல்கிறார்கள் என்பது குறித்த பதிவேடுகள் இல்லாததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரெசார்ட் உரிமையாளரை என்.ஐ.ஏ அதிகாரிகள், விசாரணைக்காக மங்களூருவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.