கட்டாய மதமாற்றம் பேராபத்து

பணம், பரிசுப் பொருட்களை வழங்குதல், சூனியம், மூடநம்பிக்கை மற்றும் மிரட்டல், ஏமாற்றுதல், லவ்ஜிஹாத் உள்ளிட்ட கட்டாய மத மாற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞரும், பா.ஜ.க மூத்தத் தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள், பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்தனர். மேலும் மதமாற்றம் தான் அறப்பணிகளின் நோக்கமா? என்று வேதனை தெரிவித்தனர். பின்னர், கட்டாய மதமாற்றங்கள் குறித்து மாநிலங்களிடம் விளக்கம் பெற்று மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் இந்த மனு மீதான விசாரணையை வரும் டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். முன்னதாக, உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை விசாரணை செய்கையில்,  கட்டாய மதமாற்றம் ஒரு மிக தீவிர விவகாரம். அது நாட்டின் பாதுகாப்பை பாதிக்கக்கூடும். இது மிக ஆபத்து ஏற்படுத்தும் விஷயம். ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. அப்படியானால், இந்த கட்டாய மதமாற்றம் என்பது என்ன? என கேள்வி எழுப்பியது நினைவு கூரத்தக்கது.