தமிழகத்தில் பள்ளிகளில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க, நடமாடும் ஆலோசனை மையம் அமைக்கும் திட்டத்தை தொடங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல திட்டங்களை போலவே இந்த திட்டமும் பெயரளவில் மட்டுமே செயல்பட்டது. பிறகு கிடப்பில் போடப்பட்டது. இந்த சூழலில், தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க நடமாடும் ஆலோசனை மையம் செயல்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என ஒரு மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயணா அமர்வு, ‘பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மாணவர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் மாணவர்கள் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் 14417 அறிமுகம் செய்யப்பட்டு, அந்த எண் அனைத்து பாடப்புத்தகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே நேரம் பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடமாடும் ஆலோசனை மையங்கள் முறையாக செயல்படவும் அரசு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் தேவைப்படும் பள்ளிகளில் ‘உள்புகார் குழுக்கள்’ அமைக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழாதவாறு கொள்கைகளை உருவாக்கி அந்த கொள்கையின் நகல்களை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிக்கவும், தீர்வுகாணவும் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். எவ்வாறு தீர்வுகாண வாய்ப்புள்ளது என்பதையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்காக, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். அந்தக்குழு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நடமாடும் மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் வேண்டும்” என உத்தரவிட்டது.