கர்நாடக மாநிலம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரீக், தமிழகத்தின் மதுரை, கோவை என பல பகுதிகளில் சென்று பலரை ரகசியமாக சந்தித்து வந்தான். அவன் சென்று வந்த இடங்களுக்கு எல்லாம் என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், கடந்த செப்டம்பர் மாதம் நாகர்கோவிலில் 3 நாட்கள் ஷாரீக் தங்கியிருந்துள்ளான் என தெரியவந்ததையடுத்து, நாகர்கோவிலில் அவன் தங்கியிருந்த விடுதியின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தமிழகம், கேரளாவில் ஷாரீக் சுற்றித் திரிந்ததும், செப்டம்பர் 8ம் தேதியில் இருந்து 3 நாட்கள் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் பிரேம்ராஜ் என்ற போலி பெயரில் அவன் தங்கியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. அங்கு தங்கியிருந்தபோது 2 நாட்கள் வெளியே சென்று கன்னியாகுமரி, சுசீந்திரம் போன்ற சில பகுதிகளுக்கு ஷரீக் சென்று வந்துள்ளான். எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சதிச் செயலில் ஈடுபட ஷரீக் திட்டமிட்டானா அல்லது அங்கு ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவு நபர்கள் யாரோடேனும் தொடர்பு கொண்டானா, அங்கு அவன் யாரையெல்லாம் சந்தித்தான், அதன் காரணம் என்ன என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.