எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கான பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7 சதவீதமாகக் குறைத்துள்ளது. “பாரதப் பொருளாதாரம் 2021 ல் 8.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சில நாடுகளில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் மீட்சி அடைய வேண்டும், உள்நாட்டு தேவை அதிகரிக்க வேண்டும். இப்படி மீட்சி அடையும் போது பாரதத்தின் வளர்ச்சியை அது பெரிய அளவில் ஆதரிக்கும். நடப்பு நிதியாண்டில் பாரதத்தின் பணவீக்கம் சராசரியாக 6.8 சதவீதமாக இருக்கும். மார்ச் 2023க்குள் ரிசர்வ் வங்கியின் பெஞ்ச்மார்க் வட்டி விகிதம் 6.25 சதவீதமாக உயரலாம். வட்டி விகிதம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி, கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக தனது ரெப்போ விகிதத்தை ஏற்கனவே 1.9 சதவிகிதப் புள்ளிகள் உயர்த்தி ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அன்னிய செலாவணியை பொறுத்தவரை, ஆசியாவில் வளர்ந்து வரும் பெரும்பாலான சந்தைகளில் நாணய மதிப்பைச் சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின் வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சியடைந்து உள்ளது. இதன் மூலம் மார்ச் மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 79.50 ஆக இருந்த நிலையில், தற்போது 81.77 ரூபாயாக உள்ளது. உலகலாவிய பொருளாதார மந்தநிலை, ரஷ்யா உக்ரைன் போர், வட்டி விகிதங்கள் மற்றும் உள்நாட்டுப் பணவீக்கம் ஆகியவையே நடப்பு நிதியாண்டிற்கான பாரதத்தின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகள் குறைக்கப்பட்டு உள்ளதற்கு காரணம். எனினும், உள்நாட்டில் நிலவும் அதிகப்படியான தேவையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக பாரதம் உள்ள காரணத்தால் உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் குறைவான அளவிலேயே பாரதம் பாதிக்கும்” என தெரிவித்துள்ளது. முன்னதாக, நிகழும் நிதியாண்டில், பாரதப் பொருளாதாரம் 7.3 சதவீதமும், அடுத்த நிதியாண்டில் அது 6.5 சதவீதமாக இருக்கும் என எஸ்&பி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.