சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சட்ட விரோதமாக சிறையில் மசாஜ் செய்துகொள்வது, வெளிநபர்களுடன் பேசுவது, உயர்தர உணவுகளை வரவழைத்து உண்பது என ஆடம்பரமாக இருந்தார். அவருக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதைத்தொடர்ந்து சிறையில் மேலும் பல வசதிகளை அவர் அனுபவிக்கும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து அமலாக்கத் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்திருந்தார் சத்யேந்தர் ஜெயின். இந்நிலையில், திடீரென தனது மனுவை அவர் திரும்ப பெற்றார். இந்த விவகாரத்தில் பொருத்தமான மன்றத்தை அணுகி நிவாரணம் பெற உள்ளதாகவும், எனவே இந்த மனுவை திரும்பப் பெறுவதாகவும் சத்யேந்திர ஜெயினின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஊடகங்களுக்கு இந்த விவகாரத்தில் எந்த தடையும் விதிக்கவோ அல்லது எந்த வழிகாட்டுதலையும் வழங்கவோ நீதிமன்றம் மறுத்துவிட்டது.