மங்களூருவில் ஒரு கட்டாய மதமாற்றம்

மங்களூருவில் 20 வயதான ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்துக்கு மாற்ற முயன்ற வழக்கில், ஒரு பெண் மருத்துவர் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயிடமிருந்து இந்த புகாரைப் பெற்ற காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த பெண், பிகர்னகட்டேயில் உள்ள நியூ ஃபேன்ஸ் பஜாரில் பணிபுரிந்துவந்தார். வழக்கமாக, கைகம்பாவில் உள்ள கலிப் என்ற முஸ்லிம் நபருடைய கடையில் தனது அலைபேசியை ரீசார்ஜ் செய்து வந்தார். அந்த பெண்ணுடன் பழகிய கலிப், அவருடன் நட்பு கொண்டார். நல்ல வேலை வாங்கித் தருவதாகக்கூறி, கடந்த ஜனவரி 14, 2021 அன்று கல்லாப்புவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினார், அந்த பெண், நமாஸ் செய்யவும் குர்ஆனை படிக்கும்படியும் கட்டாயப்படுத்தினார். இந்த வலுக்கட்டாய மதமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்த பெண்ணை கலிப் தாக்கி கொடுமைப்படுத்தினார். மேலும், அவரது பெயரை ஆயிஷா என்று மாற்றச் சொல்லியும் முஸ்லிம் மதத்திற்கு மாறும்படியும் தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளுக்கு பயந்த அந்த பாதிக்கப்பட்ட பெண், நடந்த சம்பவங்களை தனது குடும்பத்தினரிடம் இருந்து மறைத்துவிட்டார். பிறகு டாக்டர் ஜமீலா என்பவரின் வீட்டில் வேலை பார்த்தார். அங்கு ஜமீலாவும் அந்த பெண்ணை பர்தா அணியுமாறும் மதம் மாறும்படியும் வற்புறுத்தினார். இதற்கிடையில், அந்தப் பெண்ணுக்கு பத்ராவதி பகுதியைச் சேர்ந்த அய்மான் என்ற மற்றொரு முஸ்லிம் நபரிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில் அந்த நபர், அவருடன் டேட்டிங் செய்யத் தொடங்கும்படி வற்புறுத்தினார். இதனையடுத்து தன்னை கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற கலிப், டாக்டர் ஜமீலா, அய்மான் மற்றும் கலிப்பின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த பெண் புகார் அளித்துள்ளார்.