குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமருக்கு உள்ள பணிகளை நரேந்திர மோடி மறந்துவிட்டார். அவர் எப்போதும் தேர்தல் பிரச்சாரத்திலேயே இருக்கிறார். நீங்கள் வேறு யாரையும் பார்க்க வேண்டியதில்லை. என் முகத்தைப் பார்த்து வாக்களியுங்கள் என தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி கூறுகிறார். உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறைதான் பார்ப்பது, உங்களுக்கு எத்தனை வடிவங்கள் உள்ளன, உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார். மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த ஒப்பீடுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் மகனான பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் அவமதித்துவிட்டது என பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.