நடவ் லபிட்டுக்கு வலுக்கும் கண்டனம்

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப் படம் குறித்த இஸ்ரேல் நாட்டின் திரைப்பட இயக்குனர் நடவ் லபிட் கருத்துக்கு பதில் அளித்துள்ள புகழ்பெற்ற மூத்த நடிகரான அனுபம் கெர், “ஹோலோகாஸ்ட் சரி என்றால் காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றமும் சரிதான். குறிப்பாக ஹோலோகாஸ்ட் படுகொலைகளால் பாதிக்கப்பட்ட யூத சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நடவ் லபிட், அப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது மிகவும் வெட்கக்கேடானது, துரதிர்ஷடவசமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரி பண்டிட்டுகள் நடத்திய அதே போராட்டத்தை நடத்திய தனது சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் வலியை ஏற்படுத்தியுள்ளார். அந்த அறிக்கை வெளியான உடனேயே, பல ‘டூல் கிட்’ கும்பல்கள் செயல்பட துவங்கின. எனவே, இது திட்டமிட்ட நடவடிக்கை என்று நினைக்கிறேன். கடவுள் அவருக்கு ஞானத்தைத் தரட்டும்! நாங்கள் அதற்கு சரியான பதிலை வழங்குவோம்” என தெரிவித்தார். அதேசமயம், தனது டுவிட்டர் பதிவில், அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பாராட்டப்பட்ட திரைப்படமான “ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்” படத்தின் ஸ்டில்களை “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்துடன் பகிர்ந்துகொண்டுள்ள அவர், “பொய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது உண்மையை விட எப்போதும் சிறியது” என்று தெரிவித்துள்ளார். காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, “உண்மை மிகவும் ஆபத்தானது. இது மக்களை பொய் சொல்ல வைக்கும்” என கருத்துத் தெரிவித்துள்ளார். காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் கிருஷ்ண பண்டிட் கதாபாத்திரத்தில் நடித்த தர்ஷன் குமார், “ஒவ்வொருவருக்கும் அவர்கள் பார்க்கும் மற்றும் உணரும் எந்தவொரு விஷயத்திலும் அவரவர் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும். ஆனால் உண்மையில் மறுக்க முடியாது. காஷ்மீர் ஃபைல்ஸ் என்பது காஷ்மீரி பண்டிட் சமூகத்தின் உண்மையான அவலத்தை சித்தரிக்கும் ஒரு திரைப்படம்… அவர்கள் இன்னும் கொடூரமான பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நீதிக்காக போராடுகிறார்கள். எனவே இந்த படம் கொச்சையானது அல்ல, யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது” என லாபிட்டின் கூற்றுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதைத்தவிர, நடிகை பல்லவி ஜோஷி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.