கோவா தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய-சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய – சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வுக்குழு தலைவர் நடவ் லபிட் பேசுகையில், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம்’ என்றார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலை சேர்ந்த நடவ் லபிட் தெரிவித்த கருத்துக்கு பாரதத்துக்கான இஸ்ரேல் தூதர் நவ்ர் கிலொன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தி காஷ்மீர் பைல்ஸ் குறித்து விமர்சனம் செய்த நடவ் லபிட்டிற்கு ஒரு திறந்த மடல் இது. நடவ் லபிட் நீங்கள் வெட்கப்படவேண்டும் ஏனென்றால், பாரத கலாசாரத்தில் விருந்தினர்கள் கடவுளை போன்றவர்கள். உங்களை மதித்து, உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவராக உங்களை அழைத்த பாரத தேசத்தவர்களை நீங்கள் மிக மோசமாக அவமானப்படுத்தியுள்ளீர்கள். நான் திரைப்படத்துறை நிபுணர் அல்ல ஆனால், பாரதத்தில் இன்னும் திறந்த நிலை காயமாக உள்ள அதற்கு பாரதம் இன்னும் விலை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு குறித்து ஆழ்ந்து தெரிந்துகொள்ளாமல் பேசுவது சரியானதல்ல. பாரதம் இஸ்ரேல் மக்கள் இடையேயான நட்பு மிகவும் வலிமையானது. நீங்கள் ஏற்படுத்திய பாதிப்பிலும் அது நிலைத்து நிற்கும். ஒரு மனிதனாக நான் வெட்கப்படுவதாக உணர்கிறேன். பாரதத்தின் தாராள மனப்பான்மை மற்றும் நட்பிற்கு நாங்கள் திருப்பி செலுத்திய மோசமான நடத்தைக்காக பாரத மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்’ என்றார்.மேற்கு மத்திய நாடுகளுக்கான இஸ்ரேலின் தூதர் ஜெனரல், கோபி ஷோஷானி, தி காஷ்மீர் கோப்புகள் குறித்த நதவ் லாபிட்டின் அறிக்கைக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில், “நான் காஷ்மீர் கோப்பைப் பார்த்தேன், அதன் நடிகர்களை சந்தித்தேன். இந்த விஷயத்தில் நடவ் லாபிட்டை விட எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. அவரது பேச்சுக்குப் பிறகு, நான் எனது கருத்தை நடவிடம் கூறினேன்” என கூறியுள்ளார்.