ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக மகாராஷ்டரா மாநிலம், வாஸிமில் (நவ. 11) நடந்த நிகழ்ச்சியின் போது, விடுதலைப் போராட்ட வீரர் வீரசாவர்க்கர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். வீர சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி சிறையிலிருந்து வெளியே வந்தவர் என்றும், ஆங்கிலேயர்களுக்கு உதவியவர் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
திருவாளர் ராகுல் காந்தி பாரத தேசத்தின் வரலாற்றை முழுமையாக படிக்கவில்லை என்பதும், சுதந்தரப் போராட்ட வீரர்களைப் பற்றி முழுமையாகவும் அறிந்து கொள்ளவில்லை என்பதும் அவரின் விமர்சனத்திலிருந்து தெரிய வருகிறது. சாவர்க்கர் பற்றி அவரது பாட்டி இந்திரா காந்தி கூறியதையும் ராகுல் அறியவில்லை. அவர் இரண்டு முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று காந்தி, நேரு போராடிய காலத்தில் அவர்களது சிறை வாழ்க்கை எப்படியிருந்தது என்பதையும், சாவர்க்கர் அந்தமான் சிறையில் அனுபவித்த கொடுமைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவது இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது குறித்து சாவர்க்கர் தெரிவித்த கருத்துக்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினாரா என்பது பற்றிப் பார்ப்போம்.
சவார்க்கர் தனது கடிதத்தின் இறுதியில் “I, beg to remain, Sir Your most Obedient Servant” என எழுதியதைக் குறிப்பிட்டு, ராகுல் காந்தி விமர்சனம் செய்கிறார். ஆனால், 1921 பிப்ரவரி மாதம் மகாத்மா காந்தி எழுதிய கடிதத்தில், (Letter to the Duke of Connaught) I beg to remain your Royal Highness faithful Servant M.K.Gandhi என்று எழுதி இருப்பதை ராகுல் அறிந்திருக்க மாட்டார்.
1920 ஜூன் மாதம் 22-ஆம் தேதி லார்டு செம்ஸ்ஃபோர்டுக்கு எழுதிய கடிதத்திலும் மகாத்மா காந்தி, I have the honour to remain Your Excellency’s obdt. Servant M.K.Gandhi எனக் குறிப்பிட்டுள்ளதை தங்களுக்கு வசதியாக மறந்துவிட்டு, சாவர்க்கர் மீது மட்டும் குற்றச்சாட்டை வைக்கிறார். 1920கள் வரை இந்தியாவில் அரசுக்கு எழுதும் அதிகாரப்பூர்வ கடிதத்தின் பொதுவான பாணி இதுதான் என்பதை அவர் உணரவில்லை.
மகாத்மா காந்தி கூட ஆங்கிலேயர்களை இதேபோன்ற, மரியாதைக்குரிய தொனியில் குறிப்பிட்டார் என்பதற்கு மேலுள்ள வரிகளே எடுத்துக்காட்டாகும். பிப்ரவரி 1, 1922 தேதியிட்ட அப்போதைய இந்திய வைஸ்ராய்க்கு அவர் எழுதிய கடிதம் பின்வரும் வரியுடன் முடிந்தது: “உங்கள் மாண்புமிகு ஊழியரும் நண்பருமான எம்.கே.காந்தி.”
சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினார் என அவரது சுதந்திரப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ராகுல் காந்தி, தனது கொள்ளுத் தாத்தா நேரு செய்த ஒரு செயலை மறந்து விட்டார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு, அந்தமான் சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரி சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பது. உண்மையில் கடிதத்தை முழுமையாகப் படித்த பின்னர், குற்றச்சாட்டை வைத்திருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் போது, காந்தி, நேரு சிறையில் இருந்த காலத்தை விட அதிக ஆண்டுகள் சிறையிலிருந்தவர் சாவர்க்கர். அதிலும் அவர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு விடுதலைப் போராட்ட வீரரும் அடைந்ததில்லை.
எந்த சிறைக் கொடுமையையும் அனுபவிக்காத ஜவஹர்லால் நேருவே கூட ஆங்கிலேய அரசிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருக்கிறார் என்பதை ராகுலுக்கு யாராவது சொன்னால் நல்லது. நபா சிறைத்தளத்தில் உள்ள தகவல் பலகையின் படி, நபா சமஸ்தானத்திற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி 1923 செப்டம்பர் 22 ஆம் தேதி நேரு, கே.சந்தானம், ஏ.டி. கித்வானி ஆகியோர் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இருப்பினும், சிறைக் கொடுமைகளை தாங்க முடியாமல், நேரு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒரு பத்திரத்தில் மீண்டும் நபாவின் சமஸ்தானத்திற்குள் நுழைய மாட்டேன் என எழுதிக் கையெழுத்திட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதிய புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) முன்னாள் பேராசிரியருமான பேராசிரியர் சமன்லால், “நேரு கைது செய்யப்பட்டு போலீஸ் அறையில் சில மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் இரண்டு வாரங்கள் நபா சிறையில் அடைக்கப்பட்டார். அங்குள்ள சிறை அதிகாரிகளால் அவர் மோசமாக நடத்தப்பட்டார். அதையடுத்து “இனி ஒருபோதும் சமஸ்தானத்திற்குள் நுழைய மாட்டோம்” என்று பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகுதான் நேரு நபா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்” என்று பதிவிட்டிருக்கிறார்.
நேருவின் தந்தை மோதிலால் நேரு, அவரை விடுவிக்க வைஸ்ராயிடம் சிபாரிசு செய்ததாகவும் நம்பப்படுகிறது. நேருவுடன் சிறையில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் கே.சந்தானம், ‘ஜவஹர்லாலுடன் கைவிலங்கு’ என்ற தனது புகழ்பெற்ற நினைவுக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “நபா சிறையில் நாங்கள் அடைக்கப்பட்டிருப்பது வெளியுலகுக்குத் தெரியவில்லை. பண்டிட் மோதிலால் நேரு கவலையடைந்தார். பஞ்சாபில் உள்ள பல்வேறு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பிறரிடமிருந்து நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை அறிய முயன்றார். எந்தப் பதிலும் கிடைக்காததால் அவர் வைஸ்ராயை அணுகினார். அதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆனது. பின்னர் நபா சிறை அதிகாரிகள் திடீரென தங்கள் போக்கை மாற்றிக்கொண்டனர். நாங்கள் குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எங்கள் உடைகள் எங்களுக்கு வழங்கப்பட்டன. வெளியில் இருந்து வரும் நண்பர்கள் பழங்கள், பிற உணவுகளைக் கொடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர் ” என்று சந்தானம் நினைவு கூர்ந்திருக்கிறார். இந்த உண்மையை ஏன் ராகுல் காந்தி வெளியில் சொல்ல மறுக்கிறார்?
நாட்டு விடுதலைக்குப் பின்னர், நாட்டின் பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னரே அறிந்து எச்சரித்தவர் சாவர்க்கர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அசாம் பிரச்னை, பாகிஸ்தான் கோரிக்கையால் ஏற்பட உள்ள தேசப் பிரிவினை, சீனாவின் ஆதிக்க சிந்தனை போன்றவற்றுக்கும், சிறுபான்மையினரை தாஜா செய்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் தெளிவான கருத்தைத் தெரிவித்தவர் சாவர்க்கர்.
1941 இல், கிழக்கு வங்காளத்தில் இருந்து முஸ்லிம்கள் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் குடியேறத் தொடங்கியபோது, எதிர்காலத்தில் அசாமிய கலாச்சாரத்திற்கும் இந்தியாவின் வடகிழக்கு எல்லைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று சாவர்க்கர் எச்சரித்தார். அதற்கு பதிலளித்த பண்டித ஜவஹர்லால் நேரு, “இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது, அதாவது திறந்தவெளி இருக்கும் இடத்தில் மக்கள் குடியேறுவதை எப்படி தடுக்க முடியும்?” என வினா எழுப்பினார். சாவர்க்கர் அன்று அச்சப்பட்டதை போலவே, 1941இல், அசாமின் முஸ்லிம்களின் மக்கள்தொகை வெறும் 10 % மட்டுமே. இன்று, அது 35 %
ஆக உள்ளது. அப்போது சூஃபிகளாக இருந்த அவர்களில் பலர் இன்று தியோபந்த் பள்ளிகளின் பிரசாரத்தால் தீவிர வஹாபிகளாக மாறியுள்ளனர். இது எதிர்கால இந்தியாவில் பல சிக்கல்களை உருவாக்கலாம்.
1954 ஆம் ஆண்டில், நேரு பஞ்சசீலக் கொள்கையைக் கொண்டு வந்தபோது. சாவர்க்கர் மீண்டும் நேருவின் ராஜதந்திரம் தவறு என்று எச்சரித்தார். எதிர்காலத்தில் சீனா இந்திய நிலத்தை விழுங்க முயலும் என்றார். 1962-ல் சீனா இந்தியாவைத் தாக்கி, இந்தியாவின் நிலத்தின் பெரும் பகுதியை விழுங்கியபோது அவரது கணிப்பு உண்மையாகிவிட்டது.
1937 ஆம் ஆண்டில், 14 ஆண்டுகள் மிகக் கடுமையான சிறைவாசம் மற்றும் 13 ஆண்டுகள் தனிமைக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு சாவர்க்கர் விடுவிக்கப்பட்டபோது, காங்கிரஸின் சோசலிஸ்ட் குழு அவரை கட்சியில் சேர அழைத்தது. ஆனால் சாவர்க்கர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அதற்கு அவர் அளித்த பதில், இந்து- முஸ்லிம் ஒற்றுமையை இந்திய சுதந்திரத்திற்கு முன் நிபந்தனையாக மாற்றியதன் மூலம் காங்கிரஸ் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது என்பதாகும்.
இந்து- முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல் சுதந்திரத்தை வெல்ல முடியாது என்ற காங்கிரஸின் எண்ணத்தை முஸ்லிம் தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டு, சிறப்பு உரிமைகளை முஸ்லிம்கள் பெறுகிறார்கள். இந்தக் கொள்கை இந்துக்களையும் முஸ்லிம்களையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்குப் பதிலாக அவர்களைப் பிரித்துவிடும் என்றார் சாவர்க்கர். திருவாளர் ராகுல் காந்தி, சாவர்க்கர் குறித்து மகாத்மா காந்தி கூறியதையும், தனது கொள்ளுப்பாட்டி இந்திரா காந்தி கூறியதையும் சற்றே அறிய வேண்டும்.
சாவர்க்கரின் நூற்றாண்டின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ”இந்தியாவின் தவப்புதல்வர்களுள் ஒருவர் சாவர்க்கர்” என்று குறிப்பிட்டதை அவரது பேரனுக்கு யாரேனும் எடுத்துச் சொன்னால் அவரது புத்தி தெளியக்கூடும்.
1920களில் செல்லுலர் சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்ட நேரத்தில், மகாத்மா காந்தி சி.ஆர்.தாஸுக்கு எழுதினார்: “சாவர்க்கர் சகோதரர்களின் திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். அதுபோலவே, சரியான நேரத்தில் விழித்துக் கொள்ளாவிட்டால், இந்தியா தனது இரண்டு உண்மையுள்ள மகன்களை இழக்கும் அபாயத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்ல, “லண்டனில் சாவர்க்கரைச் சந்தித்ததில் (1909) மகிழ்ச்சி அடைந்தேன். அவர் தைரியமானவர். அவர் புத்திசாலி. அவர் ஒரு தேசபக்தர். அவர் வெளிப்படையான புரட்சியாளர். தற்போதைய ஆட்சி முறையின் கேட்டினை அதன் அருவருப்பான வடிவில், அவர் என்னை விட மிகவும் முன்னதாகவே பார்த்தார். இந்தியாவை நேசித்ததற்காக அவர் அந்தமானில் இருக்கிறார்” என்றும் மகாத்மா காந்தி எழுதி இருக்கிறார். லண்டனில் இருந்த இந்தியா ஹவுஸில் சாவர்க்கர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் காந்திஜி பேசி இருக்கிறார்..
இது எதுவுமே தெரியாமல், கிறுக்குத்தனமாக சாவர்க்கர் மீது ராகுல் காந்தி அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைப்பது அறியாமையா அல்லது தேர்தலுக்காக பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை பெறுவதற்காக நடத்துகின்ற கூத்தா என்பது, காங்கிரஸ்காரர்களுக்கே விளங்கவில்லை. இவரது கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக உத்தவ் தாக்கரேவின் சிவசேனை தலையில் அடித்துக்கொள்கிறது!