மனதின் குரல் 95வது பகுதி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த நிகழ்ச்சி 95வது பகுதி, நாம் மிக விரைவாக மனதின் குரலின் 100வது பகுதியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்நிகழ்ச்சி என்னைப் பொறுத்தவரை 130 கோடி நாட்டு மக்களையும் இணைக்கின்ற ஒரு கருவி. இதன் ஒவ்வொரு பகுதிக்கு முன்பாகவும், கிராமங்கள் நகரங்களிலிருந்து வந்திருக்கும் ஏராளமான கடிதங்களையும் படிப்பது, சிறுவர்கள் முதல் பெரியோர் வரையிலானவர்களிடமிருந்து வந்திருக்கும் ஒலிவழிச் செய்திகளைக் கேட்பது என்பது எனக்கு ஒரு ஆன்மீக அனுபவமாகவே இருக்கிறது.

தெலங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த நெசவாளிச் சகோதரர் தாம் எல்தீ ஹரிபிரசாத், ஜி20 மாநாட்டிற்கான சின்னத்தைத் தனது கைகளாலேயே நெய்து எனக்கு அனுப்பியிருந்தார். அற்புதமான இந்த நெசவுக் கலை இவரது தந்தையாரிடமிருந்து பாரம்பரியமாக இவருக்குக் கிடைத்திருக்கிறது.

நண்பர்களே, சில நாட்கள் முன்பாக ஜி20ற்கான சின்னம், பாரதத்தின் தலைமை ஆகியவை தொடர்பான இணையதளத்தைத் தொடங்கி வைக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. பொதுப் போட்டி வாயிலாக இந்தச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  ஹரிபிரசாத் அனுப்பிய பரிசு, தெலங்கானாவின் ஏதோ ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபர் கூட, ஜி20 உச்சி மாநாட்டோடு எந்த அளவுக்குத் தான் தொடர்பு கொண்டிருப்பதாக உணர்கிறார் என்பதைப் பார்க்கும் போது மனது இனித்தது.

ஜி-20 மாநாட்டில் பங்கெடுக்கும் நாடுகளின் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையின் மூன்றில் இரண்டு பங்கு. உலக வர்த்தகத்தில் நான்கில் மூன்று பங்கு. உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் கொண்டது. டிசம்பர் 1ம் தேதி தொடங்கி, இத்தனை பெரிய நாடுகளின் வல்லமை வாய்ந்த குழுவிற்குத் பாரதம் தலைமை தாங்க இருக்கிறது.  பாரதத்திற்கும், பாரதவாசிகள் ஒவ்வொருவருக்கும் இது மிகப்பெரிய வாய்ப்பு. மேலும் இந்தப் பொறுப்பு, பாரத நாட்டு சுதந்திரத்தின் அமுதகாலத்தில் கிடைத்துள்ளது விஷேஷம்.

நாம் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலக நன்மை மீது முழுகவனத்தையும் செலுத்த வேண்டும். உலக நன்மை, ஒற்றுமை, சுற்றுச்சூழல் தொடர்பான புரிந்துணர்வு, நீடித்த வளர்ச்சி என இவற்றோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு பாரதத்திடம் இருக்கிறது.  ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் கருப்பொருளிலிருந்து, வசுதைவ குடும்பகம் என்பதன் மீதான நம்முடைய அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது. “அனைவரும் நன்றாக இருக்கட்டும், அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும், அனைவரும் முழுமையடையட்டும், அனைவருக்கும் நலன்கள் பயக்கட்டும்” என்பது நாம் எப்போதும் கூறிவருவது. இனிவரும் நாட்களில், தேசத்தின் பல்வேறு பாகங்களில், ஜி 20 மாநாடு தொடர்பான பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட இருக்கின்றன. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மக்கள் உங்கள் மாநிலங்களுக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்படும்.  நீங்கள் உங்கள் பகுதியின் கலாச்சாரத்தின் பல்வகையான, தனித்துவமான வண்ணங்களை உலகின் பார்வைக்கு எடுத்துக் காட்டுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

உங்களிடம், குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்தில் நான் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். அது, நீங்களும், ஏதோ ஒரு வகையிலே ஜி20 மாநாட்டோடு கண்டிப்பாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். துணியில் ஜி20யின் பாரத நாட்டுச் சின்னத்தை மிகவும் நேர்த்தியாக, அழகாக உருவாக்கலாம், அச்சிடலாம். உங்கள் இடங்களில் ஜி-20யோடு தொடர்புடைய விவாதங்கள், உரைகள், போட்டிகள் போன்றவற்றை அரங்கேற்றும் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுங்கள் என்று பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் G20.in என்ற இணைத்தளத்தில் நுழைந்தால், உங்கள் விருப்பத்திற்கேற்ப அங்கே பல விஷயங்கள் கிடைக்கும்.

நவம்பர் மாதம் 18ம் தேதி ஒட்டுமொத்த உலகின் விண்வெளித்துறை ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டதைக் கண்டது.   முதன்முதலாக பாரதத்தின் தனியார் துறை ஒன்று, ‘விக்ரம் எஸ்’ ராக்கெட்டை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவியது. உள்நாட்டு விண்வெளி ஸ்டார்ட் அப்பின் இந்த முதல் ராக்கெட், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டபோது, பாரதநாட்டவர் ஒவ்வொருவரின் சிரமும் பெருமையில் நிமிர்ந்தது.

விக்ரம் எஸ் ராக்கெட்டில் பல சிறப்பம்சங்கள் உண்டு. இது மிகவும் லகுவானது, விலை குறைவானது. குறைந்தபட்ச செலவினம் உலகத்தரம் வாய்ந்த விண்வெளித் தொழில்நுட்பம் என்பது பாரதத்தின் அடையாளமாக ஆகி விட்டது. இந்த ராக்கெட்டின் சில முக்கிய பாகங்கள் 3டி பிரிண்டிங், அதாவது முப்பரிமாண அச்சிடுதல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. இது பாரதத்தில் தனியார் துறை விண்வெளிச் செயல்பாடுகளுக்கான ஒரு புதிய யுக உதயத்தின் அடையாளம். தேசத்தின் தன்னம்பிக்கை நிறைந்த ஒரு யுகத்தின் தொடக்கம். விண்வெளியை தனியார் துறைக்காகத் திறந்து விட்ட பிறகு, இளைஞர்களின் கனவுகள் மெய்ப்படத் தொடங்கி இருக்கிறது. ராக்கெட்டை உருவாக்கி வரும் இந்த இளைஞர்கள் ‘வானம் எல்லையல்ல’ (Sky is not the limit) என்று கூறுகிறார்கள்.

கடந்த சில மனதின் குரல் பகுதிகளில் நாம் விண்வெளி, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் ஆகியன தொடர்பாக அதிகமாக உரையாடி வருகிறோம் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு; நமது இளைஞர்கள் இந்தத் துறையில் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்கள் என்பது ஒன்று. அடுத்தது, அவர்கள் பெரிதாகச் சிந்தித்து, பெரிதாகச் சாதிக்கிறார்கள். இப்போதெல்லாம் சின்னச்சின்ன சாதனைகளால் அவர்கள் நிறைவெய்துவது இல்லை. நூதனக் கண்டுபிடிப்பு மற்றும் மதிப்புருவாக்கலின் இந்த சிலிர்க்கவைக்கும் பயணத்தில் அவர்கள் தங்களுடைய பிற இளைய நண்பர்களையும், ஸ்டார்ட் அப்புகளையும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.