காங்கிரசின் உதவாத காசோலைகள்

செப்டம்பர் 14, 2022 அன்று, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் சில முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஜுனைத், சோஹைல், ஆரிப், ஹபீஸ், சோட், கரிமுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை 14 நாட்களில் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் அதன் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பம் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள எவ்வித உதவியும் இன்றி தனித்து விடப்பட்டுள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து டைனிக் பாஸ்கர் செய்தி நிறுவனத்தின் சந்தியா திவேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் பேசினார். அந்த அறிக்கையின்படி, இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பல அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகள் உதவுவதாக உறுதியளித்தனர். அவர்களுக்கு நிதி உதவியாக சில காசோலைகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் எம்.எல்.ஏ வீரேந்திர சௌத்ரி ரூ.1 லட்சமும், உ.பி காங்கிரஸ் கமிட்டி ரூ. 2 லட்சமும் காசோலை அளித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெறப்பட்ட காசோலை பணமில்லாமல் (பவுன்ஸ்) திரும்பியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் காசோலை தெளிவின்மையால் வங்கியால் நிராகரிக்கப்பட்டது. இதேபோல, உத்தரப் பிரதேச நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் அமித் ஜானி கொடுத்த ரூ.1 லட்சம் காசோலையும் பணமின்றி திரும்பியது. லக்கிம்பூர் மாவட்ட நிர்வாகம் குற்றம் நடந்த போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 16 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தது. அவர்களுக்கு வீடு, வேலை போன்ற உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஒரு மாதத்திற்குள் குற்றவாளிகளை தண்டிப்பதாக உ.பி அரசு உறுதியளித்தது. 14 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் வழக்கு விசாரணை இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது. சில சமயங்களில் நீதிபதி இடமாற்றமும், சில சமயங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மைனர்களாகவும் இருப்பது விசாரணையை தாமதப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கடந்த 2 மாதங்களில் 45 முறை நீதிமன்றத்திற்கு சென்று வந்துள்ளனர். இப்படி நீதிமன்றத்தை சுற்றி வருவதில் அவர்கள் சோர்வடைந்துவிட்டனர் என கூறப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக லக்கிம்பூர் கேரியின் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது சரியான விவரங்கள் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.