மகாராஷ்டிர மக்களின் ஆராத்ய தெய்வம் சத்ரபதி சிவாஜி மகராஜாவின் வாழ்க்கை, மகாராஷ்டிரா மட்டுமல்ல பாரதம் முழுமைக்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக விளங்குகிறது. அவரது முழு வாழ்க்கையும் நாம் அனைவரும் மீண்டும் பார்க்கும் வண்ணம் விரைவில் நிஜமாகப் போகிறது. சிவாஜி மகராஜின் வாழ்க்கையை பாரத மக்கள் அனைவரும் கண்டுணர வேண்டும், உத்வேகம் பெற வேண்டும் என்று பத்மவிபூஷன் பாபாசாகேப் புரந்தரே கனவு கண்டார். இதற்காக ‘சிவ சத்ரபதி பிரதிஸ்டான்’ அமைப்பை துவங்கினார். பாபாசாகேப் புரந்தரேவின் 100 ஆண்டுகள் நிறைவு மற்றும் நவம்பர் 20 அன்று வரும் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் துவங்கிய ‘சிவ சத்ரபதி பிரதிஸ்டான்’ அமைப்பு, அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணியில் முழூமூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா சுற்றுலாத் துறை அமைச்சர் மங்கள்பிரபாத் லோதா உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த சிவஸ்ருஷ்டி விரைவில் துவங்கப்பட உள்ளது.
பின்னணி: இந்த வரலாற்றுக் கருத்து சிவ சத்ரபதி பிரதிஸ்டானை நிறுவியதில் இருந்து தொடங்கியது. ராஜமாதா சுமித்ரராஜ் போசலே மற்றும் சத்ரபதி பிரதாப் சிங் மகாராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் சதாராவில், மறைந்த பாபாசாகேப் புரந்தரேவால் ஏப்ரல் 1967ல் மகாராஜா சிவ சத்ரபதி பிரதிஷ்தான் நிறுவப்பட்டது. சிவாஜி மகராஜாவின் கருத்துக்கள் மாநிலம், தேசம், உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். தற்போது புனேவில் உள்ள அம்பேகானில் உருவாகி வரும் சிவஸ்ருஷ்டிக்கு, 1974ம் ஆண்டில் விதை ஊன்றப்பட்டது. சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழாவின் முன்னூறு ஆண்டுகள் நிறைவடையும் விழா கொண்டாடப்பட்டு வந்த அந்த நேரத்தில், பாபாசாகேப் புரந்தரே, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் சிவஸ்ருஷ்டியின் தற்காலிக வடிவமைப்பை நிறுவினார். அந்த சிவ ஸ்ருஷ்டிக்கு பொதுமகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அப்போது அங்கு வந்திருந்த மறைந்த யஷ்வந்த்ராவ் சவான், சிவாஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நிரந்தரத் திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்தார். இதிலிருந்து உத்வேகம் பெற்று, சிவ ஸ்ருஷ்டியின் நிரந்தர வடிவமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சிவஸ்ருஷ்டி தீம் பார்க்: ஆசியாவின் பிரமாண்டமான வரலாற்று தீம் பார்க் சிவஸ்ருஷ்டி, புனேவில் உள்ள அம்பேகானில் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இது இந்த திட்டத்தின் முதல் கட்டமாகும். இன்றைய 21ம் நூற்றாண்டில் வாழும் ஒவ்வொரு தொழில்நுட்ப ஆர்வலரும் இங்குள்ள தொழில்நுட்பத்தில் எந்த குறையும் இல்லை என்று உணரும் வண்ணம் மிக நவீனமாக உருவாக்கப்பட்டு வரும் திட்டம் இது. இதன் மூலம், இங்கு வரும் மக்கள், தாங்களே 17ம் நூற்றாண்டு காலகட்டத்திற்குச் சென்றதை போல உணர்வார்கள். அப்படி ஒரு வித்தியாசமான அனுபவமும் வடிவமைப்பும் இதில் செய்யப்பட்டுள்ளது. அக்கால கட்டட வடிவமைப்பு, கோபுரங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்றவை 17ம் நூற்றாண்டை உணர்த்துவதாக இருந்தாலும், இந்த கட்டுமானத்தில் நவீன தொழில்நுட்பமும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் நிகழ்கால, வருங்கால சந்ததியினரும் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கைக்கால அனுபவத்தை தாங்களும் பெறுவார்கள்.
திட்டத்தின் உண்மையான தொடக்கம்: இந்த சிவஸ்ருஷ்டியின் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளிளுக்கு பல வரலாற்று சான்றுகள் கிடைக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை மக்களுக்கு நேரடி அனுபவமாக வழங்குவது மகாராஜா சிவ சத்ரபதி பிரதிஷ்டானுக்கு பெரும் சவாலாக இருந்தது. இவை அனைத்திற்கும் போதுமான ஆவணங்கள், ஆதாரங்கல் இருக்க வேண்டும், அவற்றை திரட்டி ஒழுங்கமைக்க வேண்டும் என்று பாபாசாகேப் புரந்தரே எண்ணினார். இதற்காக ஒரு குழுவை நிறுவினார். இதில், பல புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள், கோட்டை அறிஞர்கள், வரலாற்றுத் துறையில் பணியாற்றும் வல்லுநர்கள், முனைவர்கள் போன்ற பலரும் இருந்தனர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையில் எந்தெந்த விஷயங்கள் அடுத்த தலைமுறைக்கு உத்வேகமாக அமையும் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அதன் ஓவியங்களை கட்டிடக் கலைஞர் ராகுல் செம்பூர்கர் வரைந்தார். கட்டடக் கலைஞர் கேதார் குல்கர்னி வடிவமைத்த அபிகல்பன் என்ற அமைப்பினால் படம்பிடிக்கப்பட்டு இந்தக் குழு முன் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த குழுவின் செயலாளராக அஜித்ராவ் ஆப்தே இருந்தார். இப்படி பலரின் செயல்பாடுகள், பல விவாதங்களுக்குப் பிறகு, சிவஸ்ருஷ்டி திட்டம் ஒரு முழுமையான வடிவம் பெற்றது.
வரலாறும் தொழில்நுட்பமும்: இந்த சிவஸ்ருஷ்டி அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. ஹாலோகிராபி, அனிமேட்ரிக்ஸ், ப்ராஜெக்ட் மேப்பிங், மினியேச்சர்கள், மோஷன் சிமுலேஷன், 3டி, 4டி தொழில்நுட்பம், ஒளி மற்றும் ஒலி போன்ற தீம் பார்க்களில் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் போன்ற உலகளவில் பொழுதுபோக்கு துறையில் கிடைக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் இதில் அடங்கும். பாரதத்திலேயே முதன்முறையாக இத்தகைய வரலாற்றுத் திட்டங்களில் சிவஸ்ருஷ்டி பயன்படுத்தப்படுகிறது.
அடிப்படை கருத்து: முதற்கட்டமாக கோட்டைகளுக்கு பயணம், முடிசூட்டு விழா, மகாராஜாவை ஆக்ராவில் இருந்து விடுவிப்பது போன்றவற்றை 3டி தொழில்நுட்பத்தில் உணர்த்தியுள்ளனர். நான்கு கட்டங்களாகத் தயாராகும் இந்தத் திட்டத்துக்கான செலவு தோராயமாக ரூ. 438 கோடி. இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக ஆர்வமுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து இதுவரை ரூ. 60 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. பாரதம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் இந்தத் திட்டத்தைப் பார்வையிட்டு, ஆசியாவின் மிகப்பெரிய வரலாற்று தீம் பார்க் திட்டத்தை அனுபவிக்க வேண்டும். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கொள்கைகளை அடுத்த தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டும், சுயராஜ்யத்தை நிறுவி கட்டமைக்க வேண்டும். தொழில்முனைவோர், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் சிவாஜியின் உத்தி மற்றும் மூலோபாய நிர்வாகத்தின் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிவாஜி மஹாராஜாவின் எண்ணங்களைத் தூண்டும் ஒரு உத்வேகம் மற்றும் கலாச்சார மையமாக இது மாற வேண்டும் என்பதே இதன் அடிப்படை கருத்து.