பாரத தேசத்தவர்கள் பல முன்னணி நாடுகளின் வர்த்தகத் துறையில் மட்டும் அல்லாமல் அரசு அமைப்புகளிலும் பணியாற்றி தங்கள் திறமைகளை நிரூபித்து வரும் நிலையில், திறமையான நமது நாட்டினருக்கான தேவை உலக அளவில் அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இங்கிலாந்து நாட்டில் திறமையான பணியாளர்களுக்கு அதிகப்படியான தட்டுப்பாடு இருக்கும் காரணத்தால் வெளிநாடுகளில் இருந்து திறமையான ஊழியர்களை அழைக்கப் இங்கிலாந்து நிறுவனங்களின் கூட்டமைப்பு அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில் இந்தோனேசியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இருவரும் நேரில் சந்தித்துப் பேசிய அடுத்த சில மணிநேரத்தில் இங்கிலாந்து அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இங்கிலாந்து அரசு, ஒவ்வொரு வருடமும் 3,000 திறமையான மற்றும் இளம் தொழில்நுட்ப ஊழியர்களை பாரதத்தில் இருந்து தங்கள் நாட்டுக்கு அழைக்கும். 18 முதல் 30 வயதுடைய திறமையான 3,000 பாரத தேசத்தினர் இங்கிலாந்து நாட்டில் 2 வருடம் தங்கி பணியாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு விசா திட்டத்திற்கு ரிஷி சுனக் பச்சைக் கொடி காட்டியுள்ளார். இங்கிலாந்து அரசு வெளியிட்டு உள்ள ஒரு அறிவிப்பில் உலகில் முதல் முறையாக பாரதம் தான் இத்தகைய சிறப்பு விசா திட்டத்தின் கீழ் நன்மை அடையவுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு பாரதம் இங்கிலாந்து ஏற்படுத்திய மைக்ரேஷன், மொபிலிட்டி பார்ட்னர்ஷிப்ஒப்பந்தம் மேலும் வலிமை அடையும் எனத் தெரிவித்துள்ளது.