நளினி ஒரு தேச துரோகி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது பாதுகாப்பு பணியில் இருந்தவரான ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி அனுசுயா டெய்சி, காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராஜீவ் காந்தி படுகொலையின்போது நான் எஸ்ஐயாக பாதுகாப்பு பணியில் இருந்தேன். அந்த குண்டு வெடிப்பில் என் கையில் 2 விரல்கள் துண்டிக்கப்பட்டன. உடல் முழுவதும் துளைத்த குண்டு துகள்கள் இப்போதும் உள்ளன. என் உடலின் இடது பாகம் தீ காயம் அடைந்துள்ளது. நான் ராஜீவ் காந்தி படுகொலையை கண்ணால் கண்ட சாட்சி. இந்த வழக்கில் நளினி தான் முதல் குற்றவாளி. 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரும் சட்டங்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தால் தற்போது விடுதலையாகி உள்ளனர். நளினி ஊடகங்களில் பேசும்போது, நளினியை நான் சம்பவ இடத்தில் பார்க்கவில்லை என்றும் குண்டுவெடிப்பின்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தான் இல்லை என்றும், இந்திராகாந்தி சிலை அருகில் இருந்ததாகவும் அடையாள அணிவகுப்பின்போது காவல்துறை உதவியுடன்தான் நான் அவரை அடையாளம் காட்டியதாகவும் பல பொய்யான தகவல்களை அளிக்கிறார். என்னுடைய சாட்சியை மட்டும் வைத்துக் கொண்டு மட்டும் நளினி கைது செய்யப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சிகளை அடிப்படையாக வைத்துதான் அனைவருக்கும் தண்டனை கொடுத்தார்கள். அன்றைய நாளில் வெளிவந்த பத்திரிக்கைகளில் நளினி, சுபாவுடன் கூட்டத்தில் இருந்த படம் பிரசுரமாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்துக்குள் வழிகாட்டி, அடைக்கலம் கொடுத்த நளினிதான் முதல் குற்றவாளி. நளினி உதவியின்றி ராஜீவ் காந்தியை கொன்று இருக்க முடியாது. எம்.ஏ. ஆங்கில பட்டதாரியான நளினி, ராஜீவ் காந்தி என்றால் யார் என்றே தெரியாது என்று கூறுவது பெரிய பொய். இந்த குண்டு வெடிப்பில் காவலர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என 15 பேர் இறந்தனர். தமிழக மக்களை நம்பி வந்த ராஜீவ் காந்தியை கொன்றது தமிழக மக்களுக்கு இழுக்கு இல்லையா, நளினி நம் நாட்டுக்கே ஒரு துரோகி. முன்னாள் பிரதமரை கொன்ற கொலைகாரி, சோனியா காந்தி நளினியை மன்னித்துவிட்டேன் என்று கூறிய வார்த்தை நீதிபதிகளின் காதுகளில் கேட்டதால்தான் இவர்கள் விடுதலை ஆனார்கள். எனவே, சோனியா காந்தி, இறந்த காவல்துறையினரின் குடும்பத்தினர், உயிர் இழந்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தினரிடம் நளினி மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறினார்.