மோடி துவங்கிவைக்கும்காசி தமிழ் சங்கமம்

உத்தரப் பிரதேசம் வாரணாசியில், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் 19ம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். இது, தமிழக மக்கள் வாரணாசியின் மேன்மைகள், வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பாக மட்டுமில்லாமல் தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு உள்ளிட்ட பல அம்சங்களை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் நடைபெறவுள்ளது. இதில், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் நூல்களின் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரு மாதம் நடைபெற உள்ளது.

இதில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், மைசூர் மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் போன்ற நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. கண்காட்சியில் பங்கேற்க தமிழக அரசுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 5,000 பேர் வருகை புரிய உள்ளனர். கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பல்வேறு தொழில்துறை நிபுணர்கள், விவசாயிகள் உள்ளிட்டவர்கள் அடங்கிய 12 குழுவினர் காசிக்கு செல்கின்றனர். இவர்கள் அனைவரையும் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்து செல்வது, தங்குமிடம், உணவு, சுற்றி பார்த்தல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடியின் யோசனையில் உருவான நிகழ்ச்சி இது என்பதால், இதற்கான ஏற்பாடுகள் பிரமதரின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றன. காசி, பிரதமர் மோடியின் மக்களவை தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி அமைப்பாளராக பாரதிய பாஷா சமிதியின் தலைவர் பத்ம ஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வாரணாசியின் பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் இந்நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. சென்னை ஐ.ஐ.டியும் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் பங்கெடுத்துள்ளது. மத்திய அரசின் ரயில்வே, சுற்றுலா மற்றும் கலாச்சார துறைகள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வருகின்றன. உத்தரப் பிரதேச அரசும் இதில் இணைந்து செயல்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத், இதற்கான ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார்.

நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஆதித்யநாத், ‘‘தமிழ் மொழி சிவனின் திருவாயில் இருந்து வெளியான மொழி. சம்ஸ்கிருதத்துக்கும் இணையான மொழி. இம்மொழியை பேசும் தமிழ் மக்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, நம் மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பதாகும். தமிழகத்தில் இருந்து வரும் இவர்கள் அனைவரும் நமது உயரிய விருந்தினர்கள். அவர்களது வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் உறுதி செய்யப்பட வேண்டும். சிறு பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை’’ என்று அறிவுறுத்தினார்.

தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ‘‘காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுவதை நினைத்து நான் உற்சாகத்தில் இருக்கிறேன். ஒரே நாடு ஒரே அமைப்பு எனும் அடிப்படையில் துளிரும் நிகழ்ச்சியில் அழகான தமிழ் மொழியுடன் அதன் கலாச்சாரமும் கொண்டாடப்பட உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.