ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர தயார்

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, “பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை. இதை புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. மதுபானம், எரிபொருட்கள் ஆகியவற்றில் இருந்துதான் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. அதனால் யாரும் அதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணவீக்கம் பற்றி மத்திய அரசு மட்டுமே கவலைப்படுகிறது, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி சமீபத்தில் லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்தது. ஆனால், அந்த மாநில நிதியமைச்சரே அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஓராண்டில் பாரதத்தில் மட்டுமே பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது. வடஅமெரிக்காவில் ஓராண்டில் 43 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ள்து. ஆனால், நமது நாட்டில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.