உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, கட்டாய மதமாற்றம் தொடர்பாக பொது நல வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், “மிரட்டல், அச்சுறுத்தல், ஏமாற்றுதல், பொய்ய்யான வாக்குறுதிகள் அளித்தல், பரிசுகள், பணப் பலன்கள் உள்ளிட்டவை வழங்கி நாட்டில் மத மாற்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். அவரது மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா கோலி ஆகியோரது அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், “கட்டாய மதமாற்றம் என்பது மிகவும் தீவிரமானப் பிரச்சனை. இதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டாய மதமாற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். மத்திய அரசு தரப்பில் என்ன நடவடிக்கைகளை முன்வைக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு சார்பில் ஆஜராகி இதற்குப் பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியல் நிர்ணய சபையில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றம் செய்யப் படுவதைத் தடுக்க, ஒடிசா, மத்தியப் பிரதேசத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வந்துள்ளன. அந்த சட்டங்கள் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் கட்டாய மத மாற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பலர், தாங்கள் கிரிமினல் குற்றத்துக்கு உட்பட்டவர்கள் என்பதை அறிந்திருப்பதில்லை. தங்களுக்கு தொடர்ந்து உதவிகள் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்” என்றார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், “மத சுதந்திரம் இருக்கலாம். ஆனால், கட்டாய மதமாற்றம் போன்ற அளவுக்கு அதிகமான மத சுதந்திரம் கூடாது. கட்டாய மதமாற்றம் தேசத்தின் பாதுகாப்பையும், மத சுதந்திரத்தையும், குடிமக்களின் மனசாட்சியையும் பாதிக்கலாம். எனவே, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும்” என்று கூறி அடுத்த விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.