குஜராத்தின் அகமதாபாத்தையும் ராஜஸ்தானின் உதய்ப்பூரையும் இணைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த அசர்வா உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன், உதய்பூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் ஒரு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதைப்பற்றி அறிந்த உள்ளூர் மக்கள் உடனடியாக ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உதய்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் துங்கர்பூரிலேயே நிறுத்தப்பட்டு பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த என்.ஐ.ஏ மற்றும் ஆர்.பி.எப் புலனாய்வு அமைப்புகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், ரயில்வே பாதையில் இருந்து சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பயங்கரவாத செயலா, இந்த சதி திட்டத்திற்கு பின்னால் உள்ள பயங்கரவாதிகள் யார்? என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.