ஜி20 குறித்த பிரதமரின் அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டிற்காக இந்தோனேஷிய தலைநகர் பாலிக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். அதுகுறித்து செல்வதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தோனேஷியா தலைமையில் நடைபெறும் 17வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நவம்பர் 14 முதல் 16ம் தேதி வரை நான் இந்தோனேஷிய தலைநகர் பாலிக்கு பயணம் மேற்கொள்கிறேன். பாலி உச்சி மாநாட்டின் போது ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் உலகின் முக்கிய விவகாரங்களான உலகளாவிய வளர்ச்சியை மீட்டெடுத்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் மாற்றங்கள் போன்றவை குறித்து விரிவாக பேச்சு நடத்த உள்ளேன். ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பங்கேற்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பாரதத்துடனான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து பேச்சு நடத்த உள்ளேன். நவம்பர் 15ம் தேதி பாலியில் உள்ள பாரத சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களோடு உரையாட ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன். பாலி உச்சிமாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியின் போது நமது நாட்டுக்கும், மக்களுக்கும் மிக முக்கிய தருணமாக ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, பாரதத்திடம் ஒப்படைக்க உள்ளார். டிசம்பர் 1ம் தேதி 2022 முதல் பாரதம் அதிகாரப்பூர்வமாக ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு ஜி20 நாடுகளின் உறுப்பினர்களையும், பிற அழைப்பாளர்களை நான் தனிப்பட்ட முறையில் அழைக்க உள்ளேன். ஜி20 மாநாட்டில் என்னுடைய உரைகளின் போது பாரதத்தின் சாதனைகளையும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் அயராத உறுதிப்பாட்டையும் நான் குறிப்பிட்டு எடுத்துரைக்க உள்ளேன். பாரதத்தின் ஜி20 தலைமைப்பொறுப்பு, ‘வசுதைவ குடும்பகம்’ மற்றும் ‘ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அமைந்திருக்கும். இது அனைவருக்கும் சமமான வளர்ச்சி, பகிர்ந்தளிக்கப்பட்ட எதிர்காலம் என்ற கருத்தை சுட்டிக்காட்டுவதாக அமையும்” என தெரிவித்துள்ளார்.