பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த அனைத்து சமுதாயத்தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. யாதவ மகாசபை மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் இதற்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன், யாதவ மகா சபை மாநில துணைத் தலைவர் ஏ.கே.சுப்பிரமணி யாதவ்,சவுத் இந்தியா பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் திருமாறன், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், உலகத் தமிழ் சைவப் பெருமக்கள் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை ஆதரிப்பது, அதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பான தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவநாதன் யாதவ், “தமிழக அரசின் செய்திக்குறிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வார்த்தையை தி.மு.க தலைவராக ஸ்டாலின் பயன்படுத்தலாம். ஆனால், தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு அதை கூறியிருக்கக்கூடாது. தற்போது வழங்கப்பட்ட இடஒதுக்கீடு பிராமண சமூகத்தினருக்கானது என்று தி.மு.கவினர் கூறுகின்றனர். ஆனால், இதில், சுமார் 79 ஜாதிகளுக்கும் சேர்த்துதான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை பொதுப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, 2006 மற்றும் 2008ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ரூ. 8 லட்சம் வருமான வரம்பை விமர்சிக்கின்றனர். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தபோது, படிப்படியாக உயர்த்தப்பட்ட வருமான வரம்பை தி.மு.க அரசு வேடிக்கை பார்த்தது. இதை குறைத்தால் அரசின் கடைநிலை ஊழியர்கள் யாருமே இடஒதுக்கீடு பெற முடியாது.
வரும் 19ம் தேதி மதுரையில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் பேரணி நடத்தப்படும். இதில், இடஒதுக்கீடு பற்றி மக்களிடம் விவரிப்போம்” என்று கூறினார். நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி சேகர், ‘‘மன்னர் பரம்பரையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களிடம் நிலம், பொருள் பெற்று வாழ்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. அன்று எம்ஜிஆர் ஆசைப்பட்டதை, இன்று பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்’’ என்று கூறினார்.
இதனிடையே, சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆர்ய வைசிய மகா சபையின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநிலத் தலைவர் ராமசுப்பிரமணியம், “ஆர்ய வைசிய சமூகத்தில் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர். பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு செய்து மத்திய அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றமும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என அறிவித்துள்ளது. ஆனால், இந்த இடஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக்கோரி சில கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதனை அவர்கள் கைவிட வேண்டும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு மாநில அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்” என்று கூறினார்.