அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுக்குப் பின் இடைக்கால தேர்தல் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். அதன்படி சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து முதல் முறையாக இந்திய அமெரிக்கர் ஸ்ரீ தானேதர் எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் 84,096 ஒட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்டெல் பிவிங்ஸ் 27,366 வாக்குகள் பெற்றார். அமெரிக்காவில் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் உள்ள ஸ்ரீ தானேதர், அமெரிக்க நாடாளு மன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நான்காவது பாரத அமெரிக்கர். முன்னதாக, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் ஆகிய மூன்று பாரத அமெரிக்கர்களும் அமெரிக்க எம்.பி.யாகியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், கர்நாடாகாவின் பெல்காம் மாவட்டத்தில் வளர்ந்தவர். இதுகுறித்து பேசிய ஸ்ரீ தானேதர், ‘‘எனது நீண்டகால அமெரிக்க கனவு நனவாகியுள்ளது. நான் குடியேறிய இந்த நாடு, எனக்கு அதிக செல்வத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து பணம் சேர்க்க நான் விரும்பவில்லை தொழிலை விட்டு, சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது’’ என்றார்.