பிரதமர் நரேந்திர மோடி பயணம்

கர்நாடகா, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவில் இன்றும் நாளையும் (நவம்பர் 11, 12) பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். இதில், சுமார் ரூ. 25,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, நிறைவடைந்துள்ள திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பது, பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்துகொள்கிறார். அவ்வகையில், இன்று பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தையும் சென்னை மைசூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், பெங்களூருவில் நடபிரபு கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திறந்துவைப்பதுடன் பெங்களூரு சட்டப்பேரவையில்  நிறுவப்பட்டுள்ள துறவியும், கவிஞருமான கனகதாஸ் மற்றம் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர் திண்டுக்கல்லில் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்கள் வழங்கி மாணவர்களுடன் பிரதமர் உரையாற்ற உள்ளார். மறுநாள், விசாகப்பட்டினம் செல்லும் பிரதமர் அங்கு, ஓ.என்.ஜி.சி.யின் ஆழ்கடல் நீர்த் திட்டத்தை பிரதம நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார். கெய்ல் நிறுவனத்தின் ஸ்ரீகாகுளம் அங்குல் இயற்கை எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், விசாகப்பட்டினத்தில் 6 வழி ரெய்ப்பூர் விசாகப்பட்டின பசுமைப் பொருளாதார வழித்தடத்தின் ஆந்திரப்பிரதேச பிரிவுக்கும் விசாகப்பட்டின ரயில் நிலையத்தின் மறு மேம்பாட்டுப் பணிகளுக்கும் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இதைத்தொடர்ந்து, ராமகுண்டத்தில்தேசிய உர நிறுவனத்தின் உரத் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மேலும், ரூ.1,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பத்ராசலம் சாலை சட்டுப்பள்ளி ரயில்வே இணைப்புப் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பதுடன் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ரூ. 2,200 கோடி மதிப்பிலான சாலைத் திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.