ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்

ஜி20 அமைப்பின் தலைமையை பாரதம் வரும் டிசம்பரில் ஏற்கிறது. இதையொட்டி, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளையும், அதற்கான இலச்சினையையும் இணையதளத்தையும் ­­பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி இதன் தலைமையை பாரதம் ஏற்கிறது. அப்போது பேசிய பிரதமர், “ஜி20 அமைப்பின் தலைமையை பாரதம் ஏற்பது நமது நாட்டுக்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு. நமது நாடு சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடிவரும் தருணத்தில் ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்பது பெருமைக்குரியது. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ஜி20 இலச்சினைக்காக ஆயிரக்கணக்கானோர் புதுமையான வடிவங்களை அனுப்பினார்கள். அவற்றில் இருந்து, தாமரை மலரில் பூமி வீற்றிருக்கும் சின்னம் இறுதி செய்யப்பட்டது. ‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற பாரதத்தின் பாரம்பரியம், நம்பிக்கை, போரில் இருந்து உலகம் விடுதலை பெறவேண்டும் என்ற புத்தரின் போதனை, மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கை ஆகியவற்றை தாமரை சின்னம் பிரதிபலிக்கிறது. அதன் 7 இதழ்கள் 7 கண்டங்களையும், 7 இசையையும் குறிக்கின்றன. இது உலகை ஒன்றிணைப்பதை உணர்த்துகிறது. கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி, செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவி தாமரை மீது வீற்றிருக்கின்றனர். இதேபோல தாமரை மீது வீற்றிருக்கும் நமது பூமி, அறிவிலும் செல்வத்திலும் சிறந்து விளங்க வேண்டும். ‘ஒரே சூரியன், ஒரே உலகம்’ என்ற பாரதத்தின் கொள்கை உலகின் எரிசக்தி துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற சுகாதாரக் கொள்கையும் சர்வதேச அளவில் போற்றப்படுகிறது. அந்த வரிசையில் ஜி20 அமைப்புக்காக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளை தேர்வு செய்துள்ளோம். சர்வதேச அளவில் நெருக்கடிகள், குழப்பங்கள் நீடிக்கும் இந்த சவாலான நேரத்தில் ஜி20 தலைமையை பாரதம் ஏற்கிறது. சுதந்திரத்தின்போது பூஜ்ஜியத்தில் தொடங்கி, உச்சத்தை இலக்காக கொண்டு புதிய பயணத்தை நாம் தொடங்கினோம். கடந்த 75 ஆண்டுகளில் அனைத்து அரசுகளும், மக்களும் இணைந்து பாரதத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றனர். இந்த உணர்வோடு உலகத்தையும் நாம் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். ஜனநாயகம், ஒரு கலாசாரமாக மாறும்போது, மோதல் நோக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என்று உலகுக்கு பாரதம் உணர்த்தும். டிஜிட்டல் தொழில்நுட்பம், ஊழல் ஒழிப்பு, வணிகத்துக்கு ஏற்றசூழல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் பாரதம் சாதனைகலை படைத்து வருகிறது. ஜி20 தலைமை பதவிக்கான காலத்தில் பாரதத்தின் இந்த அனுபவங்கள், உலகத்தை புதிய பாதையில் பயணிக்கச் செய்யும். தமிழகம், ராஜஸ்தான், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆகிய மாநிலங்கள் விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றவை. அவ்வகையில், ஜி20 அமைப்பின் நிகழ்ச்சிகள் டெல்லியில் மட்டுமன்றி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும். இதன்மூலம் பாரதத்தின் விருந்தோம்பல் கலாச்சாரம் உலகத்துக்கே பறைசாற்றப்படும்” என்று கூறினார். ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு வரும் 15, 16 தேதிகளில் இந்தோனேசியாவில் பாலியில் நடக்கிறது. இதில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.