சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் அப்புராஜா. இவருக்கு கடந்த 7ம் தேதி கபாலீஸ்வரர் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. அந்த அழைப்பிதழில், அப்புராஜாவின் தந்தை, தாய் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் பெயர்கள் கிறிஸ்தவ பெயர்களாக இருந்தன. ஆகவே, கிறிஸ்தவரான அப்புராஜாவை ஹிந்து சமய அறநிலையத்துறையில் பணியமர்த்தியதும் அவருக்கு ஹிந்து கோயிலில் திருமணம் நடக்கவிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அப்புராஜா பற்றி இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகரத் தலைவரும், மாநில செய்தித் தொடர்பாளருமான ஏ.டி.இளங்கோவன் விசாரித்தார். அதில், அப்புராஜா கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என்பதும் மயிலாப்பூர் பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ‘ஹிந்துக்கள் அல்லாதவரின் திருமணத்தை ஹிந்து கோயில்களில் நடத்தக் கூடாது என்று நீதிமன்றங்கள் ஏற்கனவே கூறியுள்ளன. ஆகவே, கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் அப்புராஜாவின் திருமணத்தை கபாலீஸ்வரர் கோயிலில் நடத்தக்கூடாது. மீறி நடத்தினால் நீதிமன்றத்தை நாடுவேன் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், மயிலாப்பூர் கோயில் இணை ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பினார் இளங்கோவன். இதையடுத்து அப்புராஜாவின் திருமணம் கபாலீஸ்வரர் கோயில் எதிரே உள்ள திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இளங்கோவன், “ஹிந்து அறநிலையத்துறை சட்டப்படி, ஹிந்து கோயிலில் பணிபுரிபவர்கள் ஹிந்துவாகத்தான் இருக்க வேண்டும். இதை சமீபத்தில் வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், ஹிந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றுபவர்கள், தாங்கள் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்தான் என்பதற்கான ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அப்புராஜாவை எப்படி ஹிந்து கோயிலான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் எப்படி பணியமர்த்தினார்கள் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.