பாரதத்தின் தொன்றுதொட்ட பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வொரு சிறிய விஷயமும் ஏதோ ஒருவகையில் ஆன்மிகம், ஆரோக்கியம், அறிவியல், கலைகள், கல்வி, உறவுகள், நட்பு போன்ற எண்ணற்ற விஷயங்களுடன் தொடர்புள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று பொருளாதாரம். நமது பண்டிகைகள், விழாக்கள், திருமணம் போன்ற அனைத்துமே ஒரு சுழற்சி பொருளாதாரத்திற்கு முக்கிய அடிப்படையாக உள்ளது. அவ்வகையில் சமீபத்தில் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் நாடு முழுவதும் வர்த்தகர்கள் மிகப்பெரிய வணிகத்தை பார்த்தார்கள். இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது திருமணம். இது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய செலவாக இருந்தாலும் இதனால் திருமணம் சம்பந்தமான வர்த்தகம் செய்பவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு இது வாழ்வாதாரமாக உள்ளது. திருமண சீசன்களில் தான் இவர்களுக்கு பெரிய வியாபாரம் நடக்கும். இந்நிலையில் சி.ஏ.ஐ.டி ரிசர்ச் & டிரேட் டெவலப்மென்ட் சொசைட்டி என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது நவம்பர் 14 முதல் டிசம்பர் 14 வரையில் பாரதத்தில் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில் இக்காலகட்டத்தில் சுமார் 32 லட்சம் திருமணங்கள் நடக்கும், இதனால் 3.75 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். பாரதத்தில் திருமணத்திற்கான கொள்முதல் என்பது மக்களின் வழக்கமான செயல்பாடு. ஒவ்வொரு திருமணத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படும். பொதுவாக திருமண கொள்முதலில், 80 சதவீத மணமகள் சம்பந்தமான வியாபாரமும் 20 சதவீதம் மணமகன் சம்பந்தமான வியாபாரமும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.