கேரள அரசு மாநிலம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் டிஜிட்டல் ‘ரீ சர்வே’ செய்து வருகிறது. இதில் 1,500 சர்வேயர்கள், 3,200 உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியை அடுத்த 4 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றம், நில வரையறை, வகைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காக இப்பணிகளை மேற்கொள்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா உருவானபோது எல்லை வரையறையை சரியாகச் செய்யாததால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை அருகில் உள்ள தமிழக வனப் பகுதிகள் 1956ம் ஆண்டு முதலே கேரளவாசிகளால் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டன. பின்பு அங்கிருந்த வன நிலங்கள் வருவாய் நிலங்களாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு கேரள நிலங்களாக மாற்றப்பட்டன. இந்த சூழலில், தற்போது கேரள அரசு தன்னிச்சையாக இரு மாநில எல்லைகளை டிஜிட்டல் ரீ-சர்வே செய்வதால் தமிழகத்தின் சுமார் 1,400 சதுர கிலோ மீட்டர் வனம் மற்றும் தோட்டப் பகுதிகளை கேரளாவிடம் இழக்கும் நிலை ஏற்படலாம். இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை அருகே உள்ள சாந்தம்பாறை, சின்னக்கானல், பைசன் வேலி, ராஜாக் காடு, சதுரங்கப்பாறை உள்ளிட்ட இடங்களை கேரள அரசு ஆகிரமிக்கலாம். ஏற்கனவே கேரள தமிழக எல்லைப்பகுதிகளில் 627 கி.மீ. எல்லை இதுவரை சரியாக அறுதியிடப்படவில்லை. இந்த இடங்கள் பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் கேரளா இதனை மெள்ள ஆக்கிரமித்து வருகிறது என அப்பகுதி மக்களும் வன ஆர்வலர்களும் குற்றம் சாட்டுவதுடன் இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.