சி.பி.எம் மாவட்ட செயலாளரும், கேரள மாநில முக்கிய தலைவருமான அனவூர் நாகப்பனுக்கு, திருவனந்தபுர மேயர் ஆர்யா ராஜேந்திரன் அனுப்பிய கடிதம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்த்தியுள்ளது. அந்த கடிதத்தில், 265 ஒப்பந்தத் தொழிலாளர் பணியிடங்களை நிரப்ப, தங்களது கட்சித் தொண்டர்களின் பட்டியலைத் தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் ஆரம்பத்தில் ஆறு மாதங்களுக்கு நியமனம் செய்யப்பட்டாலும், அது மீண்டும் நீட்டிக்கப்படவும் வருங்காலத்தில் நிரந்தரம் செய்யப்படவும் வாய்ப்புகள் அதிகம். மேயர் இக்கடிதத்தை தனிப்பட்ட பேப்பரில் எழுதவில்லை. அவருக்கான அச்சிடப்பட்ட அலுவல்பூர்வ பிரத்தியேக கடிதத்தில் இதனை எழுதியுள்ளார். மேலும் ஆரம்பமே, “அன்புள்ள தோழர்” என்றுதான் ஆரம்பிக்கிறது. பணிக்கு தேவையான திறமையான பணியாளர்களை கட்சி, மத சார்பின்றி நியமிப்பதற்கு பதில், ‘நெப்போடிசம்’ எனப்படும் தகுதியில்லாத தனது சொந்த பந்தங்கள், கட்சியினர், ஜாதியினர், மதத்தினருக்கு ருக்கு ஆதாயம் தரும் வகையில் பதவிகளை அளிக்கும் வகையில் செயல்பட்ட மேயரின் இந்த கடிதம், சி.பி.எம் தோழர்களின் வாட்ஸ்அப் குரூப்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பா.ஜ.க கவுன்சிலர்கள் மேயர் அறையை முற்றகையிட்டு போராட்டம் நடத்திநர். பா.ஜ.க யுவ மோர்ச்சா மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்து ஆர்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேயரின் கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதேபோல மற்றொரு கடிதமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சி.பி.எம் நாடாளுமன்றக் கவுன்சில் செயலாளர் டி.ஆர். அனில்குமார், சி.பி.எம் மாவட்டக் குழுவுக்கு அக்டோபர் 24, 2022 தேதி எழுதிய ஒரு கடிதத்தில், இதேபோல “அன்புள்ள தோழர்” என்று ஆரம்பித்துள்ளார். அதில், அவர், எஸ்.ஏ.டி மருத்துவமனையில் மருத்துவமனை. மேலாளர், பராமரிப்பாளர், துப்புரவு பணியாளர் போன்ற 9 பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இதில் நியமிக்க சி.பி.எம் கட்டுப்பாட்டில் உள்ள குடும்பஸ்ரீ அமைப்பின் உறுப்பினர்களின் பட்டியலை அனுப்புங்கள் என கோரியுள்ளார்.
இதனை கண்டித்துள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், இது பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே, முதல்வர் பினராயி விஜயன் பாணியை மேயர் ஆர்யா ராஜேந்திரன் பின்பற்றுகிறார் என்று கூறினார். இதனிடையே, முன்னாள் மேயரும் இப்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினருமான வி.கே. பிரசாந்த் இதேபோன்ற காலியிடங்கள் குறித்து கட்சிக்கு (சி.பி.எம்) தெரிவிப்பது தாங்கள் பின்பற்றி வரும் முறை, எனவே இது புதிதல்ல என்று பதிலளித்துள்ளார். எதிர் கட்சியினர் சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநகராட்சியால் செய்யப்பட்ட அனைத்து நியமனங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.