ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தவாதிகள் கண்காணிப்பு

கோவை கார் குண்டுவெடிப்பு மூலம் மிகப்பெரிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் முயற்சியில் உயிரிழந்த ஜமேஷா முபின் என்பவர், முஸ்லிம் மத அடிப்படைவாத கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வந்ததும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தததற்கான பல்வேறு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறையினர் மற்றும் என்.ஐ,ஏ அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகையில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே கடந்த 2019ல் என்.ஐ.ஏ குழுவினர் அவரது வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. முபினின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க மாநில உளவுத்துறையினர் தவறினர். அதை முபின் பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. இந்நிலையில், கோவையில் விசாரணைப் பட்டியலில் இருப்பவர்கள், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், முஸ்லிம் மதவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் தீவிர ஈடுபாட்டில் உள்ளவர்கள், மத்திய, மாநில உளவுத்துறையினரின் தகவல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சுமார் 100 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு எண்ணத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களது பட்டியலை சேகரித்து உளவுத்துறையினர் அவர்களை கண்காணித்து வருகின்றனர். இதைத்தவிர, கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 30 பேரை உளவுத்துறை அதிதீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத சித்தாந்த எண்ணத்தில் உள்ள இளைஞர்களுக்கு, உலமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் நல்வழிப் பயிற்சி வழங்கவும் காவல்துறை முயற்சி எடுத்து வருகிறது.