மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்ட் சீனியர் செகன்டரி பள்ளியில், பள்ளிக் கூட்டத்திற்குப் பிறகு ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் எழுப்பியதற்காக மாணவர் ஒருவரை ஆசிரியர்கள் தண்டித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் பள்ளி வளாகத்தின் முன் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இது வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட மாணவன் ஷிவான்ஷ் ஜெயின் கூறுகையில், “தேசிய கீதத்துக்குப் பிறகு நான் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கத்தை எழுப்பினேன். அதனையடுத்து ஆசிரியர் ஜஸ்டின், என்னை வரிசையில் இருந்து வெளியே வரச் சொன்னார், என்ன சொல்கிறாய் நீ? உன் தந்தையிடம் செல் என திட்டினார். அதன் பிறகு எனது ஹிந்தி ஆசிரியர் வந்து வகுப்பு ஆசிரியரை சந்திக்கச் சொன்னார். நான் வகுப்பு ஆசிரியரை சந்தித்தபோது, இந்த முழக்கத்தை நீ உன் வீட்டில் தான் எழுப்ப வேண்டும் இங்கு அல்ல என்று கண்டித்தார். அதன் பிறகு, நான் வகுப்பறையை அடைந்தேன். எனது வகுப்புத் தோழர்களில் ஒருவர் சிவப்பு இல்லத்தின் துணைக் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அது குறித்து பேசிய வகுப்பு ஆசிரியை ஜஸ்மீனா காதுன், ஒரு பையன் வகுப்பை பெருமைப்படுத்துகிறான், இவன் வகுப்பின் பெயரைக் கெடுக்கிறான் என என்னை திட்டினார். அதன் பிறகு, ஆசிரியை என்னை அடுத்த நான்கு வகுப்புகளுக்கு தரையில் உட்கார வைத்தார்” என்று கூறினான். சமூக அமைப்புகளின் போராட்டத்தைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் தந்தை தாமஸ் கூறுகையில், சிறுவன் தேசபக்திக்காக இதை கூறவில்லை, வேடிக்கையாக கூறியுள்ளான். ஒழுக்காற்றுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார். பின்னர், ‘இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது, தேசிய கீதத்திற்குப் பிறகு ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று உச்சரிக்கப்படும் என பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.