ஆவின் பால் விலை அதிகரிப்பு

ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவினில் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32லிருந்து, ரூபாய் 35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41லிருந்து, ரூபாய் 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படுவதன் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்வதற்காக பால் விற்பனை விலை உயர்த்தப்படுகிறது’ என தெரிவித்துள்ளது. அதன்படி, ஆவினின் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ 24ல் இருந்து 30 ஆக உயரும். எனினும் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கே புதுப்பிக்கப்படும். சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிற பாக்கெட்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிற பாக்கெட்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை குறைத்து ‘டீ மேட்’ என்ற சிகப்பு நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகவும் அதற்காக ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை குறைத்து வருவதாகவும் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது சிந்திக்கத்தக்கது.