அரவிந்த் கெஜ்ரிவால் அரசில் அமைச்சராக இருக்கும் சத்யேந்தர் ஜெயின், தற்போது பணமோசடி வழக்கில் திகார் சிறையில் உள்ளார். இவர் மீது அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. அதில், ‘சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன. சத்யேந்திர ஜெயின் மனைவி பூனம் ஜெயினுக்கு, அவரது அறைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் அவர் திட்டமிடப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் அங்கேயே இருக்கிறார். சிறையில் அவருக்கு மசாஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகிறது. சத்யேந்திர ஜெயின் ஒரு அமைச்சர் என்பதை அவர் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்’ என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சத்யேந்தர் ஜெயின் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையின் சிசிடிவி காட்சிகளை இதற்கு சான்றாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது. தற்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சம், டெல்லி தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி சிறைச்சாலை, டெல்லி அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.