பெருவளர்ச்சி பெறும் பாரதம்

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கல் பத்ரா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஜெர்மனியின் பொருளாதாரத்தை விட பாரதப் பொருளாதாரம் 2025 மற்றும் 2026ம் நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும். அப்போது ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி நான்காவது பெரிய பொருளாதார நாடாக பாரதம் உருவெடுக்கும். அதேபோல நமது நாட்டின் பொருளாதாரம் 2027ம் ஆண்டில் ஜப்பானை முந்திவிடும். அப்போது அமெரிக்கா சீனாவுக்கு அடுத்த 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். 2022ம் ஆண்டில் உலக அளவில் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. ரூபாய் மதிப்பு குறைவு, பொருளாதார மந்தநிலை, பண வீக்கம் ஆகியவை இருந்தாலும் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக வளர்ந்து கொண்டே வருகிறது. பாரதத்தின் மக்கள் தொகை அடுத்த ஆண்டு உலகிலேயே மிகப் பெரியதாக மாறும் நிலையில் உலகின் மிகச் சிறந்த பொருளாதார நாடாகவும் பாரதம் வளர்ச்சி பெறும். பாரதத்தில் உள்ள வங்கிகளின் நெட்வொர்க் மற்றும் பரவலான பொருளாதார நிதி ஆதாரங்கள் ஆகியவை காரணமாக பாரதத்தின் வளர்ச்சி உச்சம் பெற்று வருகிறது. வங்கி வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆக கருதப்படும். மக்களின் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நமது நாட்டில் இப்போது ஒவ்வொரு 9,000 குடிமக்களுக்கும் ஒரு வங்கி கிளை உள்ளது. வங்கிகள் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக ஏ.டி.எம்களை நாடு முழுவதும் பராமரித்து வருகின்றன. தினமும் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் சேவை மையங்களை பயன்படுத்தி வருகின்றனர். பரதப் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே வருவது பாரத மக்களுக்கு பெருமைதரும் விஷயம்” என தெரிவித்துள்ளார்.