அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008ம் ஆண்டு 20 சாமி சிலைகள் மாயமானது. காவல்துறையின் சிலகடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணையில் இந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வசித்து வந்த சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர், சென்னையை சேர்ந்த சஞ்சீவி அசோகன், பாக்கியகுமார், மதுரையை சேர்ந்த மாரிச்சாமி, ஸ்ரீராம் என்கிற சுலோகு, பார்த்திபன், சிதம்பரத்தை சேர்ந்த பிச்சுமணி ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, கும்பகோணம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வ்ழங்கப்பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சுபாஷ் சந்திரகபூர், சஞ்சீவி அசோகன், பாக்கியகுமார், மாரிச்சாமி, ஸ்ரீராம் என்கிற சுலோகு, பார்த்திபன் ஆகிய 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுபாஷ் சந்திரகபூருக்கு ரூ. 4 ஆயிரமும், மீதமுள்ள 5 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.